Idhayam Matrimony

பத்மநாபசுவாமி கோயிலில் தமிழக கலாச்சார சின்னங்கள் பொற்குவியலில் தமிழகத்திற்கு பங்கு உண்டா?:

புதன்கிழமை, 6 ஜூலை 2011      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம்,ஜூலை.- 7 - திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் ரகசிய அறைகளில் இருந்து எடுக்கப்பட்ட நகைகள் மன்னர் குடும்பத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேரளாவில் சர்ச்சை கிளம்பியுள்ளது. அதே வேளையில் பத்மநாபசுவாமி கோயிலில் தமிழக கலாச்சார சின்னங்கள் இருப்பதால் இதில் தமிழகத்திற்கும் பங்குண்டு. ஆகவே இந்த வழக்கில் தமிழக அரசு தன்னையும் ஒரு சாட்சியாக சேர்க்க வேண்டும் என்று கிளிரோ அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.  திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் ரகசிய அறைகளில் இருக்கும் பொற்குவியல்களின் மதிப்பை கணக்கிட்டு பட்டியலிடுமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய 7 பேர் கொண்ட குழு முன்னிலையில் அறைகள் திறக்கப்பட்டது. ஒவ்வொரு அறையிலும் தங்க, வைர, வைடூரிய நகைகள் பொற்குவியல்களாக இருந்தது. மொத்தமுள்ள 6 அறைகளில் பி அறையை தவிர மற்ற அறைகள் திறக்கப்பட்டு விட்டன. பி அறை இரும்பு திரைகளால் மூடப்பட்டு இருப்பதால் அதை திறக்க முடியவில்லை. நிபுணர் குழு வரவழைக்கப்பட்டு அறையை திறப்பது குறித்து நாளை இறுதி முடிவெடுக்கப்படுகிறது.
இதற்கிடையில் பி அறையை திறந்தால் நாட்டுக்கே ஆபத்து என அரச குடும்பம் தெரிவித்ததாக தகவல் பரவியது. ஆனால் அரசு குடும்பத்தினர் அதை மறுத்துள்ளனர். இதுவரை திறக்கப்பட்ட அறைகளில் இருந்த நகைகளின் மதிப்பு ரூ. 1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. பி அறையையும் திறந்து கணக்கிட்டால் மொத்த மதிப்பு ரூ. 2 லட்சம் கோடியை எட்டும் எனத் தெரிகிறது.
இதற்கிடையில் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட நகைகள் யாருக்கு சொந்தம் என்பதில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. அந்த நகைகள் கோவில் சொத்து. அவற்றை கோவிலில் வைத்து பாதுகாப்போம் என அறநிலையத் துறை மந்திரி கூறியுள்ளார். அதே நேரம் இந்த விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் என்ன சொல்கிறதோ அதை கேட்போம் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் இந்த நகைகள் மன்னர் குடும்பத்துக்கே சொந்தமானது. எனவே நகைகளை மன்னர் குடும்பத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று சிலர் குரல் எழுப்பி உள்ளனர்.
நகைகள் மதிப்பிடப்படுவதை நிறுத்த வேண்டும். மதிப்பீட்டின் மூலம் கோவிலுக்கு தீவிரவாதிகள் மற்றும் கொள்ளையர்களால் ஆபத்து வரும் என்று சிலர் கருதுகிறார்கள். இந்த கோவிலில் தமிழக கலாச்சார சின்னங்கள் இருப்பதால் தமிழகத்திற்கும் பங்குண்டு. எனவே இந்த வழக்கில் தமிழக அரசு தன்னையும் ஒரு சாட்சியாக சேர்க்க வேண்டும் என கிளிரோ அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. அருட்காட்சியகம் அமைத்து கோயில் நகைகளை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். புதையல் இருந்தால்தான் அரசு அதை கையகப்படுத்த முடியும். இந்த கோயில் நகைகள் அனைத்தும் அரச குடும்பத்தினரும், பக்தர்களும் காணிக்கையாக கொடுத்தது. ஆகவே இதை அரசு எடுக்க முடியாது என்று வரலாற்று ஆய்வாளர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
கோவில் நகைகள் மூலம் ஏழை குழந்தைகளுக்கு கல்வி வழங்க வேண்டும். கேரளாவில் சிறப்பு வாய்ந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அதற்கு நகைகளை அரசு எடுக்க வேண்டும் என பலவிதமான குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் பொற்குவியல் கணக்குகளை விளம்பரப்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்று திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்