முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள சட்டசபையில் இடதுசாரி கட்சி வெளிநடப்பு

செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம், ஜூலை12 - கேரளாவில் பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்கள் பரவி வருகிறது என்றும் இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இடதுசாரி கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் இந்த கோரிக்கை தொடர்பான தீர்மானத்திற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததை அடுத்து அவர்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். கேரள சட்டசபையில் நேற்று இடது கம்யூனிஸ்டு  தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி  ஒரு ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்தது.

கேரளாவில் பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்கள் பரவி வருவதாகவும், இது குறித்து  சபையில் விவாதிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

அப்போது சுகாதாரத் துறை அமைச்சர் அடூர் பிரகாஷ் பேசினார்.

இந்த ஆண்டில் இதுவரை 78 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார் என்றும் ஆனால் இடதுசாரி கட்சிகள் ஆட்சி செய்த போது இந்த நோயினால் 1408 பேர் பாதிக்கப்பட்டனர் என்றும் இவர்களில் 85 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

தற்போது கேரளாவில் பன்றிக் காய்ச்சல் உள்பட பல்வேறு காய்ச்சல் நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்துகள் உள்ளன என்றும் பிரகாஷ் கூறினார்.

அரசு மருத்துவமனைகளில் தற்காலிக டாக்டர்களை நியமிக்க மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அமைச்சரின் பதில் திருப்தி அளிக்காததாலும் ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு சபாநாயகர் கார்த்திகேயன் அனுமதி தராததாலும் எதிர்க்கட்சி தலைவர் வி.எஸ். அச்சுதானந்தன் தலைமையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்