முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து அணியை இந்தியா வீழ்த்தும்: கபில்தேவ்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

 

லக்னோ, ஜூலை.17 - இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தும் என்று உலகக் கோப்பை நாயகன் கபில்தேவ் தெரிவித்தார். இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 21 ம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் லக்னோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கபில்தேவ் மேலும் கூறியதாவது, சமீபத்தில் முடிவடைந்த மேற்கிந்திய தீவுகள் தொடரை வென்ற இந்திய அணியால் ஏன் இங்கிலாந்தை வீழ்த்த முடியாது. இந்தியா நிச்சயம் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றும். இந்திய வீரர்கள் இப்போது ஓய்வின்றி விளையாடி வருகின்றனர். அவர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் முழு கவனத்தை செலுத்த வேண்டும். 

மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடரை 2 -0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனாலும் இந்திய அணி தொடரை வென்று விட்டது. விளையாட்டுடன் தொடர்புடையவர்கள் விளையாட்டு அமைப்பின் நிர்வாகிகளாக வந்தால் அது விளையாட்டை சரியான வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கு உதவும். அரசியல்வாதிகள் விளையாட்டு அமைப்பின் நிர்வாகிகளாக வரக் கூடாது என்று நான் ஒரு போதும் கூறியதில்லை. அரசியல்வாதிகளோ, தொழிலதிபர்களோ யாராக இருந்தாலும் அவர் விளையாட்டு வீரராக இருந்திருக்க வேண்டும். 

மும்பை கிரிக்கெட் சங்க தேர்தல் குறித்து பேசிய அவர், தலைவர் பதவிக்கு போட்டியிடும் திலிப் வெங்சர்க்கருக்கே எனது ஆதரவு. அவர் என்னோடு கிரிக்கெட் விளையாடியவர். அவருடைய ஆற்றலை பற்றி எனக்கு தெரியும். அதனால் அவருக்குத்தான் எனது ஆதரவு என்றார். 

வரும் 21 ம் தேதி தொடங்கும் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் இந்தியா எதிர்கொள்வது கடும் சவாலாக இருக்கும் என்று பலர் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தன்னம்பிக்கை மிக்க வீரரான கபில்தேவ் கூறியிருக்கும் கருத்து இந்திய வீரர்களுக்கு நிச்சயம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்