முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நில மோசடி புகார்: சென்னையில் இதுவரை 18 பேர் கைது

புதன்கிழமை, 20 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஜூலை.20 - நில அபகரிப்பு மோசடி புகார் தொடர்பாக கடந்த 15 நாட்களில் சென்னை நகரில் மட்டும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நில அபகரிப்பு குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இதுவரை 90 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் போலீஸ் கமிஷனர் ஜே,கே. திரிபாதி தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், மீட்கப்பட்ட நிலங்களின் மதிப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை என்றும் கூறினார். அதே நேரத்தில் அனைத்து வழக்குகளிலும் விரைவான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 

தி.மு.க. ஆட்சியில் ஏழை மக்கள் அப்பாவி மக்களிடம் இருந்து அவர்களது நிலங்களை தி.மு.க.வினர் போலி ஆவணங்கள் மூலம் பறித்து கொண்டது, மிரட்டி வாங்கிக் கொண்டது போன்ற அட்டூழியங்கள் நடந்தன. அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இந்த காலகட்டத்தில் ஆட்சியும் மாறியது. ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதல்வரானார். தான் வாக்குறுதி கொடுத்தபடி தி.மு.க.வினரால் பறிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் கொடுக்கப்படும் என்று அறிவித்த முதல்வர் ஜெயலலிதா, இதற்காக காவல் துறையில் தனி பிரிவுகள் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார். 

நில மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் நில மோசடி புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பாக பல முக்கிய புள்ளிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. விரைவில் அவர்கள் சிக்குவார்கள் எனத் தெரிகிறது. மதுரையில் இதுபோன்ற ஒரு மோசடி புகார் தொடர்பாக அட்டாக் பாண்டி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது தெரிந்ததே. 

இந்த நிலையில்தான் சென்னையில் இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் ஜே.கே. திரிபாதி தெரிவித்துள்ளார். மேலும் பலர் சிக்குவார்கள் என்றும் தமிழக மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்