முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பணியினை துவக்கி வைத்தார்

புதன்கிழமை, 20 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

 

கடலூர்,ஜூலை.20 - தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைப்படி சென்னைக்கு வீராணம் ஏரியில் இருந்து குடிநீர் வழங்கும் பணியினை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.பி. முனுசாமி துவக்கி வைத்தார். கடலூர் மாவட்டம் வடக்குத்து சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வீராணம் ஏரி குடிநீரை நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.பி. முனுசாமி தொடங்கி வைக்க சிறப்பு பணிகள் செயலாக்கத்துறை அமைச்சர் சம்பத், சமூகநலத்துறை அமைச்சர் ராமஜெயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் இது குறித்து அமைச்சர் கே.பி.முனுசாமி கூறுகையில், 

தமிழக முதல்வரால் புதிய வீராணம் திட்டம் ரூ. 720 கோடி செலவில் துவங்கப்பட்டு 18.10.2004 முதல் சென்னைக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரையில் 13.28 ஆயிரம் மில்லியன் கன அடிநீர் சென்னைக்கு வழங்கப்பட்டது. வீராணம் ஏரியில் நீர் இருப்பு குறைந்ததாலும் ஏரியில் தூர்வாறும் பணி மேற்கொண்டதாலும் சென்னைக்கு வீராணம் ஏரியில் இருந்து வழங்கப்படும் குடிநீர் 1.1.2011 முதல் நிறுத்தி வைக்கப்பட்டது. முதல்வரின் ஆணைப்படி ஜூன் மாதம் 6 ம் தேதி மேட்டூர் நீர்த் தேக்கத்தில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு ஜூன் 9 ம் தேதியன்று கல்லணைக்கு வந்தடைந்த தண்ணீரை கீழ் அணையில் இருந்து வடவாறு கால்வாய் மூலம் திறந்து விடப்பட்டு வீராணம் ஏரி நிரப்பப்பட்டு வருகிறது.    

தற்சமயம் வீராணம் ஏரியில் 507 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. மேலும் வினாடிக்கு 180 கன அடி தண்ணீர் வரத்தாகி கொண்டு இருக்கிறது. வீராணம் ஏரியில் இருந்து 10.7.2011 அன்று தண்ணீர் எடுக்கப்பட்டு வடக்குத்து சுத்திகரிப்பு நிலையம் வரை 22 கி.மீ. நீளமுள்ள குடிநீர் குழாய் சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டது. இதன் மூலம் நாளொன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் குடிநீர் சென்னைக்கு வழங்கப்படும். சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் நீர்த்தேக்கங்களான பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகியவற்றில் தற்போது 6, 095 மில்லியன் கன அடி நீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 48.67 விழுக்காடு ஆகும். இதன் மூலம் சென்னைவாழ் மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க இயலும். வீராணம் ஏரியில் தண்ணீர் இல்லாத காலங்களில் போர்வெல் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு சென்னைக்கு குடிநீர் வழங்கப்படும் என்றும் தற்போது வீராணம் ஏரியில் போதுமான தண்ணீர் இருப்பதால் மேலும் விரைவில் பருவ மழை தொடங்கவிருப்பதாலும் ஜனவரி 2012 வரை சென்னைக்கு தொடர்ந்து குடிநீர் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியில் சென்னை குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் டாக்டர் கோபால், கடலூர் மாவட்ட கலெக்டர் அமுதவள்ளி, கூடுதல் கலெக்டர் வீரராகராவ், எம்.எல்.ஏக்கள் சுரத்தூர் ராஜேந்திரன், சிவசுப்பிரமணியன், முருகுமாறன், சென்னை குடிநீர் வாரிய தலைமை பொறியாளர் கதிரவன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் எஸ்.எஸ்.வாசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்