முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

புதன்கிழமை, 20 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

பெங்களூர்,ஜூலை.20 - கபினி அணை நிரம்பி வழிகிறது. அந்த அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள உபரி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருப்பதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி கொண்டிருக்கிறது. இதையடுத்து அங்குள்ள அணைகள் மீண்டும் நிரம்பி வருகின்றன. குறிப்பாக கபினி அணை நிரம்பி வழிகிறது. இதையடுத்து அந்த அணையில் இருந்து 22 ஆயிரத்து 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. 

மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடியாகும். தற்போது அணையின் நீர் மட்டம் 82.82 அடியாக உள்ளது. அணைக்கு 12 ஆயிரத்து 227 கன அடிவீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கபினியில் இருந்து உபரி நீர் வேகமாக வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர் மட்டம் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சாகுபடியில் ஈடுபட்டுள்ள டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12 ம் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஜூன் 6 ம் தேதியே அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட உத்தரவிட்டார். அது மட்டுமல்ல, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அணைகளும் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று திறந்து விடப்பட்டன. மேட்டூர் அணை முன்கூட்டியே திறந்து விடப்பட்டதால் காவிரி, டெல்டா பாசன விவசாயிகள் தங்கள் சாகுபடி வேலையில் மும்முரமாக ஈடுபட தொடங்கினர். இந்த நிலையில் கபினியில் இருந்து கூடுதலாக தண்ணீர் வருவது அவர்களுக்கு மேலும் உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்