முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலஅபகரிப்பு வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முன்பு - வீரபாண்டி ஆறுமுகம் சரண்

செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

சேலம் ஜூலை.- 26 - சேலத்தில் அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு மற்றும் பிரிமியர் மில்ஸ் விற்பனை  தொடர்பான வழக்கில் தி.மு.க.முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நேற்று காலை 10 மணியளவில் கோர்ட் உத்தரவின் பேடி  சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து போலீசார் அவரிடத்தில் விசாரணையை தொடங்கி உள்ளனர். சேலத்தில் அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு வழக்கு மற்றும் பிரிமியர் மில்ஸ் நிலம் விற்பனை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் பாதிகப்பட்டவர்களின் புகாரின் அடிப்படையில் முன்னாள் தி.மு.க.அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் முதல் குற்றவாளி என சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரு வழக்கிலும் அவரை போலீசார் தேடி வந்தனர். போலீசார் இந்த வழக்குகளில் தன்னை கைது செய்யாமல் இருக்க வீரபாண்டி ஆறுமுகம் சார்பில் சென்னை ஐ கோர்ட்டில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த ஜாமீன் மனு மீதான விசாரணையில் ஜட்ஜ் ராஜசூர்யா  வீரபாண்டி ஆறுமுகம் வரும 25 ந் தேதி காலை 10க்குள் சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசில் சரணடைய வேண்டும்.போலீசார் அவரை தங்கள் காவலில் எடுத்து 2 வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தி முடித்துவிட்டு புதன் கிழமை 27 ந் தேதி மாலை 5 வது மாஜிஸ்திரேட் கோர்ட்டி ஆஜர்படுத்திட வேண்டும். அப்போது ரூ.25 ஆயிரத்திற்கான சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனும் அளித்து வீரபாண்டி ஆறுமுகம் வெளியே வரலாம். பின்னர் தினமும் சம்மந்தப்பட்ட போலீசில் மறு உத்தரவு வரும் வரை தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். என உத்தரவிட்டார்.
கோர்ட் உத்தரவின் படி வீரபாண்டி ஆறுமுகம் நேற்று போலீசில் சரணடைவார் என்பதை போலீசார் எதிர்பார்த்தனர். இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் ஏதும் வந்துவிடக்கூடாது என்பதற்காக காலை 9 மணி முதலே தங்கம்பட்டு மாளிகையில் இருந்தும், டி.எம்.செட்டிலிருந்தும் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. இருசக்கர வாகனங்களை தவிர வேறு எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. டவுன் காவல் நிலையம்  உள்ள அந்த பகுதியில் சுமார் 100 மீட்டருக்கு எல்லா கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. சாலையின் இருபுறங்களிலும் டிவைடர் பலகைகள் வைத்து  போக்குவரத்தை மாற்றிவிட்டு போலீசார் அந்த பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தனர். பாதுகாப்பு பணிகளுக்காக போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம் தலைமையில் துணை கமிஷனர்கள் பாஸ்கரன், ரவீந்திரன் மேற்பார்வையில் மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் கண்காணிப்பில் சுமார் 200 க்கும் மேற்பட்ட போலீசாரும், 10 க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய கருப்பு உடையணிந்த அதிவிரைவு பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.போலீஸ் பாதுகாப்பு வாகனமான தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வேனும் நிறுத்தப்பட்டிருந்தது.
காலை 10 மணியளவில் வீரபாண்டி ஆறுமுகம் தனது காரில் தனது ஆதரவாளர்களுடன் டவுன் காவல் நிலையத்திற்கு வந்தார். அப்போது கூடியிருந்த தொண்டர்கள் அவருக்கு ஆதரவாக வாழ்க கோஷமும், போலீசாருக்கு எதிராக கோஷமும் எழுப்பினர். அப்போது போலீசாரின் பாதுகாப்பு டிவைடரை தள்ளிக்கு கொண்டு தொண்டர்கள் உள்ளே நுழைய முயன்றனர்.போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தனர். இதனால் அங்கு போலீசாருக்கும்,தொண்டர்களுக்கு இடைய தள்ளு முள்ளு ஏற்பட்டு சிறிது பதட்டம் நிலவியது. பாதுகாப்பு காரணங்களுக்கா வீரபாண்டி ஆறுமுகத்தின் கார் மட்டும் டவுன் காவல் நிலைய வாசல் வரை போலீசார் அனுமதித்தனர்.
பின்னர் காவல் நிலையத்தின் உள்ள வீரபாண்டி ஆறுமுகம் எம்.பி.க்கள் கே.பி.ராமலிங்கம்,ஆதிசங்கர், முன்னாள் எம்.எல்.ஏ.வும் அவரது மகனுமான வீரபாண்டி ராஜா, அவரது வக்கீல்கள் மூர்த்தி,சிவபாஸ்கரன், உதவியாளர் சேகர் ஆகியோர் மட்டுமே உள்ள அனுமதிக்கப்பட்டனர்.  சேலம் மாநகர் மத்திய குற்றபிரிவு உதவி ஆணையாளர் பிச்சை முன்பு வீரபாண்டி ஆறுமுகம் ஆஜரானார். பின்னர் சிறிது நேரத்தில் அவரது வக்கீல்களை தவிர  உள்ளே சென்ற எம்.பி.க்கள் கே.பி.ராமலிங்கம்,ஆதிசங்கர் உள்பட மற்றவர்களை போலீசார் வெளியே அனுப்பிவிட்டனர்.
காலை.10.30 மணிக்கெல்லாம் உதவி ஆணையாளர் பிச்சை, வீரபாண்டி ஆறுமுகத்திடம் விசாரணையை தொடங்கினார். இதற்கான கேள்விகளையெல்லாம் அவர்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்தனர். விசாரணையை பதிவு செய்ய வீடியோ கிராபர் அனுமதிக்கப்பட்டார். மேலும் வீரபாண்டி ஆறுமுகத்தின் உடல் நிலையை கருத்தில் கொண்டு போலீசார் டாக்டர்கள் நாகராஜ், கண்ணன்,கோகிலா அடங்கிங்கிய மருத்துவ குழுவினரை காவல் நிலைய வளாகத்திலேயே ஏற்பாடு செய்திருந்தனர். அவர்கள் தங்களது மருத்துவ வாகனத்தோடு அங்கு காத்திருந்தனர். அதே போல் வீரபாண்டி ஆறுமுகமும் தன்னுடைய மருத்துவ குழுவினரையும் உடன் அழைத்து வந்திருந்தார். இந்த மருத்துவ குழுவினர் 6 மணி நேரத்திற்கு ஒரு முறை அவரை பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
விசாரணை குறித்து துணை கமிஷனர் பாஸ்கரனிடம் நிருபர்கள் கேட்டதற்கு முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுத்திடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறார்.தொடர்ந்து அவரிடம் உதவி கமிஷனர் பிச்சை, இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணையில் எந்த பிரச்சனையும் இல்லை. அவருக்கு தேவையான உணவை நாங்கள் தயார் செய்து வைத்துள்ளோம். அவருக்கும் வீட்டில் இருந்து உணவு வருகிறது எது தேவையோ அவர் அதை சாப்பிடலாம். காலையில் விசாரணை தொடங்கிய சிறித நேரம் கழித்து அவருக்கு ஒய்வு கொடுக்கப்பட்டது .அப்போது அவர் மருந்து,மாத்திரைகள் சாப்பிட்டார். பின்னர் மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது. என்றார்.
நேற்று காலை 12 மணிக்கு வீரபாண்டி ஆறுமுகத்தை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். பின்னர் இரவு 7 மணியளவிலும் பரிசோதனை செய்தனர். தொடர்ந்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் காவல்நிலையத்தை சுற்றிலும் 200 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்