முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு வேலை வாங்கி தருவதாக 107 பேரிடம் ரூ.1.21 கோடி மோசடி பலே ஆசாமி கைது

செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூலை - 26 - தமிழ்நாடு அரசு தலைமை செயலகம் மற்றும் மின்சார வாரியத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 1 கோடியே 21 லட்சம் மோசடி செய்ததாக முரளிதரன் என்பவரை புறநகர் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை புறநகர் காவல் எல்லைக்குட்பட்ட ஆவடியை சேர்ந்த த.வேலம்மாள் என்பவர் ஜூலை 22 அன்று சென்னை புறநகர்  காவல் ஆணையாளரிடம் கொடுத்த புகாரில், தான் பூம்பொழில் நகர் ஆவடியில் வசிப்பதாகவும், கடந்த 2010-ம் வருடம் ஏப்ரல் மாதத்தில் எங்களுக்கு தெரிந்த ஆவடியில் வசிக்கும் ஆனந்தன் என்பவர் மூலம் மதுரை மாவட்டம், திருமங்கலம் நாராயணசாமி நகரில் வசிக்கும் வி.டி.முரளிதரன் என்பவர் அறிமுகம் கிடைத்தது என்றும், வி.டி.முரளிதரன் தன்னிடமும், மற்றவர்களிடமும் அரசு பணி இ.பி.யிலும், தலைமை செயலகத்தில் வேலை வாய்ப்பு உள்ளது என்று கூறியதை நம்பி, தன் மகன் செந்தில்குமாருக்கு ரயில்வே டிரான்ஸ்பருக்காகவும், தன் மருமகளுக்கு தலைமை செயலகத்தில் வேலைக்கு சேர்க்க வங்கி மூலமாகவும், நேரிடையாகவும் வி.டி.முரளிதரனிடம் ரூ.2,75,000 பணம் கொடுத்து தான் ஏமாற்றப்பட்டதாக புகார் அளித்தார்.  தன்னைப்போல் சுமார் 14 நபர்களிடமிருந்து தலைமை செயலகம் மற்றும் மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.22,75,000- த்தை பெற்றுக் கொண்ட வி.டி.முரளிதரன் வேலையும் வாங்கித் தராமலும், பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வருகிறார். பணத்தை திருப்பிக் கேட்டதால் தலைமறைவாக உள்ளார் என்றும் தனது புகாரில் கூறியிருந்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
குற்றவாளிகளை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க சென்னை புறநகர்  காவல் ஆணையாளர் கரன் சின்கா உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு 3 ஆம் அணி உதவி ஆணையாளர் சகபர் சாலி (பொறுப்பு) மேற்பார்வையில் ஆய்வாளர் செல்வசேகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் தீவிர விசாரணையில் கடந்த ஜூலை 24-ந் தேதி நண்பகல்  சென்னை திரிசூலம் பஸ் ஸ்டாப் அருகே முரளிதரனை பிடித்து விசாரணை செய்ததில், தான் வேலை வாங்கித் தருவதாக பலரை ஏமாற்றி பணம் பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தராமலும், பணத்தை திருப்பித்  தராமலும் போலியான ஆவணத்தை கொடுத்தும் ஏமாற்றியதை தனது வாக்கு மூலத்தில் ஒப்புக் கொண்டார்.
இவ்வழக்கில் சுமார் 14 நபர்களிடம் வசூல் செய்த தொகை ரூபாய் 22 லட்சத்து 75 ஆயிரம், மேலும் இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் சுமார் 107 நபர்களிடமிருந்தும் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி போலியான ஆவணத்தை  கொடுத்து ஏமாற்றி ரூபாய் 1 கோடியே 21 லட்சம் வரை வசூல்  செய்து ஏமாற்றியுள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
மேற்கண்ட குற்றவாளி முரளிதரன் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் செய்து புழல் மத்திய சிறைச் சாலையில் அடைக்கப்பட்டார். மேலும் இம்மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள் பற்றி புலன் விசாரணை போலீசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்