முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபையில் புதிய வரிகள் இல்லாத பட்ஜெட் தாக்கல்

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை,ஆக.5 - தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானது. முதல் நாளான நேற்று சபையில் 2011-12-ம் ஆண்டுக்கான முழு அளவிலான திருத்தப்பட்ட பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றிபெற்றது. தமிழக முதல்வராக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா 3-வது முறையாக பதவி ஏற்றுக்கொண்டார். கடந்த ஜூன் 3-ம் தேதி தமிழக சட்டசபை முதல் முறையாக கூடியது. அப்போது கவர்னர் பர்னாலா மரபுப்படி சபையில் உரை நிகழ்த்தினார். அரசின் திட்டங்களையும் கொள்கைகளையும் அவர் தனது உரையின் மூலம் அறிவித்தார். ஒருவாரம் நடைபெற்ற இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் நேற்று சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பமானது. காலை 10-30 மணி அளவில் முதல்வர் ஜெயலலிதாவும் மாநில நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் சட்டசபைக்கு வந்தனர். அதற்கு முன்பாக காலை 10-10 மணி அளவில் முதல்வர் ஜெயலலிதாவிடம் பட்ஜெட் அறிக்கையை கொடுத்து அவரிடம் வாழ்த்து பெற்றார் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். அதன் பிறகு இருவரும் சபைக்கு வந்தனர். காலை 10-40 மணி அளவில் சபாநாயகர் ஜெயகுமார் சபைக்கு வந்தார். பின்னர் அவை நடவடிக்கைகள் தொடங்கின. திருக்குறளை படித்து சபை நடவடிக்கையை தொடங்கிவைத்த சபாநாயகர் பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார் என்று அறிவித்தார். அதன் பிறகு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார். காலை 10-40 மணிக்கு தொடங்கிய அவரது உரை மதியம் 1.40 மணி வரை அதாவது கிட்டத்தட்ட 3 மணி நேரம் நீடித்தது. அ.தி.மு.க. அரசின் கொள்கைகள் மற்றும் புதிய திட்டங்களை அவர் வாசித்தபோது இடையிடையே உறுப்பினர்கள் மேஜையை தட்டி கரொலி எழுப்பினார்கள். பட்ஜெட் உரையை முடித்த பிறகு முதல்வருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு தன் இருக்கையில் பன்னீர்செல்வம் அமர்ந்தார். முதல்வரும் அவருக்கு பாராட்டு தெரிவித்தார். இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் போடப்படவில்லை. வரியில்லா பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விபரம் வருமாறு:-

2011-12-ம் ஆண்டில் 115 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு ஆகஸ்டு மாதத்திற்குள் மின்வெட்டு முழுமையாக ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அரசு கேபிள் டி.வி. விரைவில் மாநிலம் முழுவதும் தனது ஒளிபரப்பை தொடங்கும். திருக்கோயில் அன்னதானத்திட்டம் ஏற்கனவே அமுலில் இருந்து வருகிறது. இந்த திட்டம் மேலும் 106 கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும். பூசாரிகள், ஓதூவார்கள்,இசைவாணர்கள் ஆகியோர்களுக்கு ஓய்வூதியம் அதிகரிக்கப்படும். முதல்வர் தொகுதியான ஸ்ரீரங்கம் தொகுதியில் தேசிய சட்டப்பள்ளி புதியதாக தொடங்கப்படும். ஏற்கனவே இத்தொகுதிக்கு ரூ.190 கோடி ஒதுக்கப்பட்டு பல திட்டங்களுக்கு முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டது. மாற்று திறனாளிகளுக்கு அரசு பணிகளில் 3 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும். அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் தங்கள் படிப்பை பாதியில் நிறுத்தாமல் இருக்க அவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும். அதன்படி 10 மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு ரூ. ஆயிரத்து 500-ம் பிளஸ் 2 மாணவர்களுக்கு ரூ.2 ஆயிரமும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும். மாணவிகளுக்கு பாவாடை,தாவணிக்கு பதிலாக சல்வார் கமீஸ் ஆடையும் மாணவர்களுக்கு அரைக்கால் டவுசருக்கு பதிலாக முழுக்கால் பேண்ட்டும் வழங்கப்படும் என்றும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் தொகுதியான போடிநாயக்கனூர் தொகுதியில் அரசு பொறியியல் கல்லூரி துவங்கப்படும். மாணவ, மாணவிகளுக்கு இந்தாண்டு இரண்டு செட் சீருடையும் அடுத்தாண்டு 4 செட் சீருடையும் வழங்கப்படும். 5 ஆண்டுகளில் 60 ஆயிரம் பேருக்கு கறவை மாடுகள் வழங்கப்படும். தமிழகத்தில் புதிய 10 அரசு தொழிற்பயிற்சி மையங்கள்( ஐ.டி.ஐ) அமைக்கப்படும். நில அபகரிப்பு குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு சங்கங்கள் வலுப்படுத்தப்படும். திட்டமிட்டபடி அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. துவரம் பருப்பு, உளுந்து, கோதுமைக்கு வழங்கப்படும் சலுகை விலைத்திட்டம் நீட்டிக்கப்படும். பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். கூடுதல் மின் உற்பத்திக்கு நடவடிக்கை எடுக்கப்படும். கடலோர மாவட்டங்களில் மீன்பதப்படுத்தப்படும் மையங்கள் அமைக்கப்படும். காவல்துறையை நவீனப்படுத்த ரூ. 54 கோடி ஒதுக்கப்படும். ஒரு லட்சத்திற்கும் குறைவாக மக்கள் தொகை உள்ள 75 சிறிய நகரங்களில் புதிய நகரப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும். மக்களின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் நடமாடும் மருத்துவமனை திட்டம் அமுல்படுத்தப்படும். ஆதிதிராவிட விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.200 மாத உணவுப்படியாக உயர்த்தி தரப்படும். இதேபோல் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கும் உயர்த்தி தரப்படும். விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரேசன் அரிசி கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகள், சமூக விரோதிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறாக பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முன்னதாக சபை தொடங்கியதுமே தி.மு.க.வினர் ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர். தங்களை ஒரே வரிசையில் அமரவைக்க வேண்டும். சமச்சீர் கல்வி விவகாரம் போன்றவற்றை காரணம் காட்டி தி.மு.க. வினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.  

 

3 மணிநேரம் பட்ஜெட் படித்த ஓ.பி.எஸ்.

 

அ.தி.மு.க. அரசு ஜெயலலிதா தலைமையில் பொறுப்பேற்ற பிறகு 2011-12-க்கான பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை 10.40 மணிக்கு தாக்கல் செய்தார்.

10.40 மணிமுதல் 1.40 மணிவரை கொஞ்சமும் அசராமல் தொடர்ந்து 3 மணிநேரம் பட்ஜெட்டை படித்தார்.

பட்ஜெட் உரையை படித்து முடித்தவுடன் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஜெயலலிதா பாராட்டினார்.  மேலும் அனைத்து அமைச்சர்களும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கைகொடுத்து வாழ்த்தும், பாராட்டையும் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்