முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்டாசு ஆலை வெடி விபத்து பலி எண்ணிக்கை உயர்வு

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சிவகாசி, ஆக.7 -சிவகாசியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு.விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ளது எம்.புதுப்பட்டி கிராமம். இங்கு சிவகாசியைச் சேர்ந்த தங்கையாநாடார் மகன் கனகபிரபு என்பவருக்கு சொந்தமான சுப்ரீம் பயர் ஒர்க்ஸ் உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்டவர்கள்பணிபுரிந்து வருகின்றனர். இங்கு சிறியது முதல் பெரியது வரையிலான உயர்ரக பட்டாசுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று மதியம் மருந்து கலவை அறையில் பட்டாசு தயாரிக்க தேவையான மருந்து கலவைகள் தயார் செய்யும் பணி நடைபெற்று வந்தது. அப்போதுதிடீரென கலவையில் உராய்வு ஏற்பட்டு தீ பொறி கிளம்பியது. தீ பொறி மருந்து கலவையில் பட்டு வெடித்து சிதறியது. இதில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த புதுக்கோட்டை முத்தையாத்தேவர் மனைவி சண்முகத்தாய்(42), அதே ஊரை சேர்ந்த சின்னத்தேவர் மனைவி அங்கம்மாள்(50), காடனேரி ஆவுடைத்தாய்(53), அதே ஊரைச்சேர்ந்த வீரம்மாள்(50), பீகாரை சேர்ந்த மம்தா(40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக பலியானார்கள். 

மேலும் விபத்தில் புதுக்கோட்டை பூங்காவனம் மகன் முருகன்(45), கருப்பையாத்தேவர் மகன் முனியாண்டி(40), மொக்கச்சாமி மனைவி பத்மாவதி(51), குல்லூர்சந்தை முருகேசன் மனைவி வீரம்மாள்(50), ராஜூ மனைவி அம்மாபொன்னு(40),சித்தமநாயக்கன்பட்டி சொக்கலத்தேவர் மகன் பாண்டி(53), பீகாரை சேர்ந்த உஸ்மா(20) ஆகிய  7  படுகாயமடைந்த சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சையளிக்கப்பட்டது. 

இவ்விபத்து கேள்விப்பட்ட தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் விபத்து நடந்த சில மணி துளிகளில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  சம்பவ இடத்தை பார்வையிட்டார். மேலும் பாதுகாப்பு பணிகளை முடுக்கிவிட மாவட்ட கலெக்டர் மு.பாலாஜிக்கு உத்தரவிட்டார். மேலும் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சென்ற தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் அங்கு படுகாயமடைந்து சிகிச்சை பெற்று கொண்டிருந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார். பின்னர் அவரது குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி படுகாயமடைந்தவர்களை உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேல் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லும்வரை அமைச்சர் சிவகாசி அரசு மருத்துவமனையிலேயே இருந்தார். மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட கலெக்டர் மு.பாலாஜி, மாவட்ட காவல்கண்காணிப்பாளர் நஜ்மல் ஹோடா பார்வையிட்டனர்.

அமைச்சருடன் அதிமுக அனைத்து அணி நிர்வாகிகள்,தொண்டர்கள் திரண்டு வந்திருந்து  மீட்புபணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த குல்லூர்சந்தை முருகேசன் மனைவி வீரம்மாள்(50), ராஜூ மனைவி அம்மாபொன்னு(40),சித்தமநாயக்கன்பட்டி சொக்கலத்தேவர் மகன் பாண்டி(53), பீகாரை சேர்ந்த உஸ்மா(20) ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்கள். சிவகாசி வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்