முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க பொருளாதாரம் குறித்து ஒபாமா புலம்பல்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஆக.7 - அமெரிக்காவின் பொருளாதாரம் வளர்ச்சி பெறுவதற்கு உதவும் வகையில் அமெரிக்க எம்.பி.க்கள் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் பாரக் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அந்நாட்டு தொலைக்காட்சி மற்றும் வானொலியில் வாராந்திர உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், அமெரிக்காவின் பொருளாதாரத்தை வளர்ச்சி அடையச் செய்வதற்கு தனது அரசு ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றும், இது தொடர்பான நடவடிக்கைகள் பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட உள்ளன என்றார். 

அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு பாராளுமன்ற பிரதிநிதிகள் சபை, செனட் சபை ஆகியவற்றின் எம்.பி.க்கள் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், பொருளாதாரத்தை வளர்ச்சி அடையச் செய்யவும் இப்போதிருந்தே இந்த பணியில் இறங்க வேண்டும் என்றும் அமெரிக்க எம்.பி.க்களை அவர் கேட்டுக்கொண்டார். தொழிலாளர்கள், நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் வரிச்சலுகைகள் அளிக்கப்படும் என்றும் புதிய தொழில்கள், வர்த்தகங்கள் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் இத்துறைகளில் உள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்றும் அவர் கூறினார். வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் வர்த்தக உடன்பாடுகளுக்கு ஊக்கமளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். 

வேகமான பொருளாதார வளர்ச்சியையும் அதிகமான வேலை வாய்ப்புகளையும் எட்ட வேண்டும் என்பதே இப்போதைய அவசர தேவையாக உள்ளது என்றும் அவர் கூறினார். வளைகுடா நாடுகளில் எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகின்றன. ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமியால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே ஜப்பானில் இருந்தும் எண்ணை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதேபோல ஐரோப்பாவிலும் பொருளாதார சூழ்நிலை மிகவும் மோசமாக உள்ளது. இதுபோன்ற சிக்கலான சூழ்நிலைகளில் நமது பொருளாதாரத்தை வளர்ச்சி அடைய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது என்றும் அவர்  கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்