முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ் ஈழம் மலர திருமா - ராமதாஸ் வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.8 -​ இலங்கை தமிழர் பிரச்சனை தீர தமிழர்களுக்கு தனி தமிழ் ஈழம் மலர வேண்டும் என தொல்.திருமாவளவன், ராமதாஸ் ஆகியோர் கூறினர். தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தமிழ் ஈழமே தீர்வு என்ற தலைப்பில் சென்னையில் நேற்று கருத்தரங்கம் நடந்தது.   கருத்தரங்கில் பா.ம.க. நிறுவனர்  ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். 

அப்போது திருமாவளவன் பேசியதாவது:​ தமிழ் ஈழ விடுதலை போராட்டம் நசுக்கப்பட்டு விட்டது. இனி யாரும் பேச மாட்டார்கள் என்ற மமதையில் சிங்கள ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் கடைசி தமிழன் உள்ளவரை தமிழ் ஈழத்தை பற்றி பேசிக் கொண்டுதான் இருப்பான்.   தமிழ்நாட்டில் சாதி மதத்தால் மக்களிடையே பிளவு, இன்னொரு புறத்தில் சினிமாவாலும், போதை பழக்கத்தாலும் இளைய சமுதாயம் சீரழிந்து வருகிறது. அவர்களுக்கு தமிழர்களைப் பற்றியோ, தமிழர்களின் வரலாற்றை பற்றியோ புரிந்து கொள்ள இயலவில்லை. உழைப்புக்கும், தியாகத்துக்கும் அங்கீகாரம் இல்லை. உரிமைக்காக போராடுபவர்கள் மதிப்பிழந்து வருகிறார்கள். இந்திய அரசின் வெளியுறவு கொள்கை, இலங்கையில் தமிழ்ஈழம் வரக்கூடாது என்பதுதான். ஆட்சி செய்த பாரதீய ஜனதாவும் சரி, ஆளுகின்ற காங்கிரசும் சரி, கம்யூனிஸ்டு கட்சிகளும் சரி தமிழ் ஈழத்தை ஆதரிக்கவில்லை.   

முதலமைச்சர் ஜெயலலிதா இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என சட்ட சபையில் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். தி.மு.க.வும், தமிழ் ஈழம் என்று பலமேடையில் தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால், அப்போது தி.மு.க. சூழ்நிலை கைதியாக இருந்தது. தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தமிழ் ஈழம்தான் தீர்வு என பேசுவது இல்லை. இலங்கை தமிழர் பிரச்சினை தீர, தமிழர்களுக்கு தனி தமிழ் ஈழம் மலர வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார்.

பா.ம.க. தலைவர் ராமதாஸ் பேசும் போது, இலங்கை இன பிரச்சினைக்கு ஒரே தீர்வு தமிழ் ஈழம்தான். தமிழ் ஈழம் மலரும் வரை குரல் கொடுப்போம் என்றார். 

கருத்தரங்கில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் இளஞ்செழியன், ரவிக்குமார், வன்னியரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்