முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.ஜே.தாமஸ் நியமனம் செல்லாது - சுப்ரீம்கோர்ட்டு

வெள்ளிக்கிழமை, 4 மார்ச் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.4 - மத்திய ஊழல் தடுப்பு ஆணையராக பி.ஜே. தாமஸ் நியமிக்கப்பட்டது செல்லாது என்றும் ஆணையர் பதவிக்கு தாமஸை நியமனம் செய்யும்போது சம்பந்தப்பட்ட ஆதாரங்களை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான உயர்மட்ட குழு சரியாக பரிசீலனை செய்யவில்லை என்றும் சுப்ரீம்கோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. 

மத்திய ஊழல் ஆணையம் ஒரு சட்டப்பூர்வமானதாகும். இந்த ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படுவருக்கு சுய அதிகாரம் இருக்கிறது. ஆணையத்தின் தலைவரை பிரதமர் தலைமையிலான 3 உறுப்பினர்கள் கொண்ட குழு தேர்வு செய்து அதை ஜனாதிபதிக்கு சிபாரிசு செய்யும். இந்த 3 உறுப்பினர்களில் எதிர்க்கட்சியை சேர்ந்த ஒருவரும் உறுப்பினராக இருப்பார். மத்திய ஊழல் ஒழிப்பு ஆணையராக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பி.ஜே. தாமஸை ஆணையராக நியமிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான குழு சிபாரிசு செய்தது. ஆனால் ஆணையராக தாமஸ் நியமிக்கப்படுவதற்கு குழுவில் இடம் பெற்றிருந்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதாவது பி.ஜே. தாமஸ் மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது. ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவரை மத்திய ஊழல் தடுப்பு ஆணையராக நியமித்தால் அவர் நியாயமாக செயல்படமாட்டார் என்று சுஷ்மா சுவராஜ் வாதிட்டார். ஆனால் குழுவின் தலைவராக இருந்த பிரதமர் மன்மோகன் சிங்கும் மற்றொரு உறுப்பினருமான பி.சிதம்பரமும் சேர்ந்து சிபாரிசு செய்ததால் தாமஸ் ஆணையராக நியமிக்கப்பட்டார். ஆணையராக தாமஸ் நியமிக்கப்படுவதற்கு முன்பு மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சராக ராசா இருந்தபோது அந்த துறையின் செயலாளராக தாமஸ் இருந்தார். அவர் செயலாளராக இருக்கும்போது ஸ்பெக்ட்ரம் ஏலம் விடும் பணியும் நடந்ததாக கூறப்படுகிறது. அதற்கு முன்பு கேரளாவில் மாநில உணவுத்துறை செயலாளராகவும் தாமஸ் பதவி வகித்தார். அப்போது கேரள மாநில முதல்வராக மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் கருணாகரன் இருந்தார். அந்த நேரத்தில் கேரள மாநிலத்திற்கு பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டது. அதில் சுமார் ரூ. 3 கோடி ஊழல் நடந்திருப்பதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கருணாகரனும் இடம் பெற்றிருந்தார். அவர் சுப்ரீம்கோர்ட்டிற்கு சென்று வழக்கு மீது விசாரணை நடத்த தடை வாங்கினார். அதனால் அந்த வழக்கு கிடப்பில் கிடந்தது. பின்னர் வழக்கை விசாரிக்க சுப்ரீம்கோர்ட்டு அனுமதி அளித்தது.  திருவனந்தபுரம் தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் தாமஸூம் இடம்பெற்றுள்ளார். இப்படி ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவரை மத்திய ஊழல் தடுப்பு ஆணையராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சுப்ரீம்கோர்ட்டில் கடந்த பல மாதங்களாக நடந்துவந்தது. விசாரணை முடிவில் தீர்ப்பு இன்று (நேற்று) அளிக்கப்படும் என்று சுப்ரீம்கோர்ட்டு அறிவித்தது. இந்த தீர்ப்பு எப்படி இருக்கும் என்று சட்ட நிபுணர்கள் உள்பட அனைத்து தரப்பினர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். 

அறிவித்தபடி சுப்ரீம்கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது. அதில் மத்திய ஊழல் தடுப்பு 14-வது ஆணையராக தாமஸ் நியமிக்கப்பட்டது செல்லாது என்று கூறப்பட்டுள்ளது. மத்திய ஊழல் தடுப்பு ஆணையராக தாமஸை நியமிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான உயர்மட்டக்குழு சிபாரிசு செய்துள்ளது. ஆனால் இந்த சிபாரிசை செய்வதற்கு முன்பு ஆணையராக யாரை நியமிக்க வேண்டும் என்பது தொடர்பான தஸ்தாவேஜூகளையும் இதர விஷயங்களையும் குழுவானது சரியாக ஆய்வு செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது. அதனால் அந்த குழுவின் அறிவுரையானது அரசியல் சட்டத்திற்கு உட்பட்டது அல்ல என்று அந்த தீர்ப்பில் சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்துள்ளது.

பாக்ஸ் நியூஸ்

பி.ஜே.தாமஸ் உடனடியாக ராஜினாமா

மத்திய லஞ்சம் தடுப்பு ஆணையராக பி.ஜே.தாமஸ் நியமிக்கப்பட்டது செல்லாது என்று சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு அளித்தவுடன் அதை கவனித்த பி.ஜே. தாமஸ், ஆணையர் பதவியில் இருந்து உடனடியாக ராஜினாமா செய்துவிட்டார். 

ஆணையராக பி.ஜே. தாமஸ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ப்பட்டவுடன் அவரிடம் நிருபர்கள் பல தடவை கேள்வி கேட்டனர். அதாவது உங்கள் மீது ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. அதனால் ஆணையராக நீங்கள் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பதவியில் இருந்து ராஜினாமா செய்வீர்களா என்று கேட்டனர். அதற்கு நான் நிரபராதி என்றும் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் தாமஸ் கூறினார். மேலும் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர், சட்ட அமைச்சர் ஆகியோர்களையும் பி.ஜே.தாமஸ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது ஆணையர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று பிரதமர்,ப.சிதம்பரம், வீரப்ப மொய்லி ஆகியோர் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு தாமஸ் மறுத்துவிட்டதாகவும் தெரிகிறது. இந்தநிலையில் ஆணையர் நியமனம் செல்லாது என்று தீர்ப்பு கூறியவுடன் பதவியில் இருந்து தாமஸ் ராஜினாமா செய்துவிட்டார். தாமஸ் ராஜினாமா செய்துவிட்டார் என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லியும் கூறியுள்ளார். ஆணையராக தாமஸ் நியமிக்கப்பட்டது சட்டவிரோதம் என்று சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது என்றும் வீரப்பமொய்லி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்