முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேச அணியை வீழ்த்தி ஜிம்பாப்வே அபார வெற்றி

திங்கட்கிழமை, 8 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

 

ஹராரே, ஆக.9 - ஜிம்பாப்வே மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி 130 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. வங்கதேச கிரிக்கெட் அணி கேப்டன் ஷாஹிப் அல் ஹசன் தலைமையில் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியது. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷாஹிப் அல் ஹசன், ஜிம்பாப்வே அணியை பேட் செய்யும் படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வேயின் துவக்க வீரர்களில் மவோயூ 43 ரன்களையும் சிபாண்டா 78 ரன்களையும் குவித்தனர். தொடர்ந்து மசகட்சா 104 ரன்களையும், கேப்டன் பிரான்டன் டெய்லர் 71 ரன்களையும் சேர்த்தனர். இறுதியில் ஜம்பாப்வே அணி 131 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 370 ரன்களை குவித்தது. வங்கதேச தரப்பில் ரூபல் ஹுசேன் மற்றும் ஷாஹிப் அல் ஹசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரபியுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளையும், அப்துல் ரசாக், முகமதுல்லா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 

தொடர்ந்து முதல் இன்னிங்சை துவக்கிய வங்க தேச அணியின் துவக்க வீரர்கள் ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினர். துவக்க வீரர்களான இம்ருல் ஹயீஸ் 4 ரன்களிலும், தமீம் இக்பால் 15 ரன்கள் எடுத்த நிலையிலும் விட்டோரியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த ஷஹ்ரியார் நபீஸ் 50 ரன்னிலும், முகமது அஷ்ரபுல் 73 ரன்னிலும், கேப்டன் ஷாஹிப் அல் ஹசன் 68 ரன்னிலும் அவுட்டானார்கள். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் வங்க தேச அணி முதல் இன்னிங்சில் 96.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 287 ரன்களை எடுத்தது. ஜிம்பாப்வே தரப்பில் விட்டோரி 4 விக்கெட்டுகளையும், மொபோபு மற்றும் பிரைஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஜார்விஸ், சிகும்புரா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

முதல் இன்னிங்சில் 83 ரன்கள் லீடுடன்  இரண்டாவது இன்னிங்சை துவக்கிய ஜிம்பாப்வே அணியின் துவக்க வீரர்கள் மவோயுவும் சிபாண்டாவும் மீண்டும் ஒரு சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். முதல் இன்னிங்சில் சதமடித்த மசகட்சா 5 ரன்களை மட்டும் எடுத்து ஏமாற்றினாலும் அணியின் கேப்டன் பிரன்டன் டெய்லர் அபாரமாக ஆடி சதமடித்தார். இவருக்கு உறுதுணையாக டைபு 59 ரன்களை எடுத்தார். அணியின் எண்ணிக்கை 92 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்திருந்தபோது ஜிம்பாப்வே கேப்டன் டெய்லர் டிக்ளேர் செய்தார். ஜிம்பாப்வே தரப்பில் கேப்டன் டெய்லர் ஆட்டமிழக்காமல் 105 ரன்களையும், எர்வின் 35 ரன்களையும் எடுத்தனர். 

374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்க தேச அணி 4 ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்  இழப்பிற்கு 112 ரன்களை எடுத்திருந்தது. அந்த அணியின் முகமது அஷ்ரபுல் 19 ரன்களுடனும் முஸ்பிகர் ரஹீம் 4 ரன்களுடனும் 5ம் நாள் ஆட்டத்தை துவக்கினர். கடைசி நாளில் வங்க தேச அணி 263 ரன்களை எடுக்க வேண்டியிருந்தது. அந்த அணியின் கைவசம் 7 விக்கெட்டுகளும் இருந்தன. அஷ்ரபுல் 39 மற்றும் ரஹீம் 28 ரன்களில் ஆட்டமிழந்தபின் வங்கதேச அணியின் வெற்றி கனவு தகர்ந்தது. இந்த ஜோடி பிரிந்த பிறகு அப்துர் ரஸாக், சபியுல் இஸ்லாம் ஆகியோர்  மட்டும் ஓரளவு சிறப்பாக விளையாடினர். கேப்டன் ஷாஹிப் அல் ஹசன் பொறுப்பற்ற ஷாட்டை விளையாடி 6 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இதையடுத்து  சீரான இடைவெளியில் வங்கதேச அணியின் விக்கெட்டுகள் வீழ்ந்ததால் அந்த அணி 57.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்களை மட்டுமே எடுத்தது. உணவு இடைவேளை முடிந்து 12 பந்துகளே வீசப்பட்ட நிலையில் வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  இதனால்  ஜிம்பாப்வே அணி 130 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது. ஜிம்பாப்வே தரப்பில் ஜார்விஸ் 4 விக்கெட்டுகளையும், மொபோபு 3 விக்கெட்டுகளையும், சிகும்புரா 2 விக்கெட்டுகளையும், விட்டோரி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.  ஆட்டநாயகனாக இரண்டாம் இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் சதமடித்த கேப்டன் பிரன்டன் டெய்லர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஒரே போட்டியைக் கொண்ட டெஸ்ட் தொடரை ஜிம்பாப்வே அணி கைப்பற்றியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago