முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. பிரமுகர் மீது நடிகை குட்டி பத்மினி மகள் புகார்

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஆக.12 - சென்னையில் தங்களுடைய 4 ஏக்கர் நிலத்தை அபகரித்துவிட்டதாக நடிகையும், டி.வி. தொடர் தயாரிப்பாளருமான குட்டி பத்மினியின் மகள் சென்னை போலீஸ் கமிஷனரிடம் திருவள்ளூர் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ.வும், மாவட்ட செயலாளருமான சிவாஜி மீது புகார் கூறியுள்ளார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் கீர்த்தனா. இவர் பிரபல சினிமா நடிகையும், டி.வி. தொடர் தயாரிப்பாளருமான நடிகை குட்டி பத்மினியின் மகள் ஆவார்.  லண்டனில் படித்து வருகிறார். இவர் நேற்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து கமிஷனரிடம் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:-

எனது தாயார் குட்டிபத்மினி பிரபல நடிகை ஆவார். குழந்தை நட்சத்திலமாக அறிமுகமாகி சினிமா துறையில் பல வருடம் இருந்துள்ளார். டி.வி. தொடர்களையும் தயாரித்துள்ளார். எனக்கு 2 சகோதரிகள் உள்ளனர்.

1994-ம் ஆண்டு கும்மிடிப்பூண்டியில் உள்ள மாதர்பாக்கம் கிராமத்தில் எனது பாட்டியின் பணத்தில் 3 ஏக்கர் நிலம் வாங்கினார். 1 ஏக்கர் நிலம் எனது தாயார் பெயரிலும், ஒரு ஏக்கர் நிலத்தை தனது பெயரிலும், மீதி நிலத்தை மகள்களின் பெயரிலும் எழுதி வைத்தார்.

தனது தொழிலில் நஷ்டம் ஏற்படவே, திருவள்ளூர் மாவட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.வும் மாவட்ட செயலாளருமான சிவாஜியிடம் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார். அது வட்டியுடன் சேர்த்து 6 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஆகிவிட்டது. அவர் பணம் கேட்டு அவசரப்படுத்தவே எனது தாயார் அவரது நிலத்தை சம்பந்தப்பட்டவருக்கு எழுதி கொடுத்து விட்டார்.

2006-ம் ஆண்டு எனது தாயார் கும்மிடிப்பூண்டி சென்று நிலத்தை பார்த்தபோது 5 ஏக்கர் நிலத்தையும், வேலிபோட்டு அதை எம்.எல்.ஏ. சிவாஜி மடக்கிப்போட்டு இருப்பது தெரிய வந்தது. எங்கள் நிலத்தில் வைக்கப்பட்டிருந்த மாந்தோப்பின் வருமானத்தையும் அவரே அனுபவித்து வந்தார். இப்போது எனது சகோதரி படிப்பிற்காக அந்த நிலம் தேவைப்படுவதால் அந்த நிலத்தை திருப்பிக் கேட்டோம்.

ஆனால், சிவாஜி எங்களை மிரட்டினார். நீதிமன்றம் செல்லக்கூட முடியாதபடி அவரது மிரட்டல் இருந்தது. சென்ற ஆட்சியில் இதுகுறித்து நாங்கள் புகார் செய்ய முடியாத நிலை இருந்தது. எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுத்து எங்கள் நிலத்தை மீட்டுத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கீர்த்தனா புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகார் பற்றி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். குட்டிபத்மினியின் சொத்து மதிப்பு ரூ.5 கோடி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்