முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷம்மி கபூர் மரணம் சோகத்தில் மும்பை திரையுலகம்

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2011      சினிமா
Image Unavailable

 

மும்பை,ஆக.- 15 - பிரபல இந்தி நடிகர் ஷம்மி கபூர் நேற்று மரணமடைந்தார். இந்தி படவுலகில் முடிசூடாமன்னனாக கொடி கட்டி பறந்தவர்கள் ராஜ்கபூர், ஷம்மி கபூர், சசிகபூர் சகோதரர்கள். இந்திய சினிமாவின் முன்னோடியான பிருதிவிராஜ் கபூரின் மகன்கள் ஆவார்கள். ராஜ்கபூர் சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். ஷம்மிகபூர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு விளம்பர படங்களில் நடித்து வந்தார். 79 வயதாகும் ஷம்மிகபூருக்கு சில நாட்களுக்கு முன் சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. மும்பை பிரிச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரை டாக்டர்கள் கவனித்து வந்தனர். மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. டயாலிசிஸ் சிகிச்சையும் செய்யப்பட்டது. மருத்துவ கருவிகள் உதவியுடன் அவரது உடல் உறுப்புகள் இயங்கியது என்றாலும் உடல்நிலை தேறவில்லை. நேற்று அதிகாலை ஷம்மி கபூர் மரணமடைந்தார். அவரது மரணம் இந்தி படவுலகை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  ஷம்மி கபூர் கடந்த 1931 ம் ஆண்டு அக்டோபர் 21 ம் தேதி மும்பையில் பிறந்தார். இந்திய சினிமாவின் தலைநகராக கொல்கத்தா விளங்கிய போது அங்கு தியேட்டர்களையும், ஸ்டூடியோக்களையும் நிறுவி இருந்த தந்தை பிருதிவிராஜ் கபூருடன் சேர்ந்து பின்னர் கபூர் குடும்பம் மும்பைக்கு வந்தது. கடந்த 1953 ம் ஆண்டு ஜீவன்ஜோதி இந்தி படத்தில் முதன் முதலாக நடித்தார். தும்சா நகின் தேக்கா, தில் தேகே தேகா, கங்கீ தில் தேரா, திவானா, புரபசர், சைனா டவுன் உள்ளிட்ட படங்கள் ஷம்மி கபூர் நடித்த காலத்தால் அழிக்க முடியாத காவியங்களாகும். 

கடந்த 1968 ம் ஆண்டு பிரம்மச்சாரி படத்தின் மூலம் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது, 1982 ல் லதாதா படத்துக்காக சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றார். 1955 ல் நடிகை கீதாபாலியை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆதித்யா ராஜ்கபூர் என்ற மகனும், காஞ்சன் என்ற மகளும் உள்ளனர். 1965 ம் ஆண்டு சின்னம்மை நோய் தாக்கி கீதாபாலி இறந்ததை தொடர்ந்து குஜராத்தை சேர்ந்த செல்வந்தரின் மகளான நீலாதேவியை 2 வது திருமணம் செய்து கொண்டார் ஷம்மிகபூர். அவரை மணந்த பின்பு இந்தி படவுலகில் ரொமாண்டிக் ஹீரோவாக கொடிகட்டி பறந்தார் ஷம்மி கபூர். ஷம்மி கபூர் இறந்த போது அவரது உடல் அருகே இருந்த மனைவி நீலாதேவியும், மகன், மகளும் கதறி அழுதனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்