முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதா சுதந்திர தின வாழ்த்து

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.- 15 - விடுதலைக்காக போராடி உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாக செய்த, வீர மறவர்களின் வழி நின்று நம் பாரதத்தை காப்போம் என முதல்வர் ஜெயலலிதா சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள சுதந்திர தின வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது: பாருக்குள்ளே நல்ல நாடாம் நம் பாரத நாடு, பழம் பெருமை, இயற்கை வளங்கள், புண்ணிய தலங்கள், சிறந்த பண்பாடு, உயர்ந்த கலாச்சாரம் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டிருப்பதோடு, உலக நாடுகள் வியக்கக்கூடிய வகையில் வேற்றுமையில் ஒற்றுமைக் கண்டு ஒருமைப்பாட்டுணர்வை வளர்த்து வருகிறது. இந்த இனிய பூமியில் வியாபாரம் செய்வதற்காக வந்த ஆங்கிலேயர்கள் நம்மை அடிமையாக்கி ஆட்டிப் படைத்தனர். அடிமைத் தளத்திலிருந்து விடுதலை பெற்று, சுதந்திரக் காற்றை நாம் சுவாசிப்பதற்காக குரல் கொடுத்து, உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்த வீர மறவர்களை நினைத்துப் போற்றி வணங்குதற்குரிய நன்னாள் இந்நாள் ஆகும். இந்நாளில் எனதருமை தமிழக மக்கள் அனைவருக்கும் சுதந்திரத் தினத் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்ணல் காந்தியடிகள் தலைமையில் அகிம்சை வழியில் போராடிய தலைவர்களும், தொண்டர்களும் தங்களது குடும்பங்களை மறந்து, சுகதுக்கங்களைத் துறந்து, வறுமையில் உழன்று தாய் நாட்டுக்காகப் போராடினர். நமது நாட்டு விடுதலைக்காக போராடி வரலாற்றில் இடம் பிடித்த அத்தனை வீரர்களையும், வீராங்கனைகளையும் நாம் இன்று நினைத்துப் போற்றுவோம். அவர்கள் வழி நின்று நம் பாரதத்தை காப்போம்.

இந்தியத் திருநாட்டில் நமது தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் முதலிடத்தைப் பெற்று விளங்கிடவும், மக்கள் மன மகிழ்ச்சியுடன் வாழ்ந்திடவும் பல அரிய மக்கள் நலத் திட்டங்களை எனது தலைமையிலான தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்கு தமிழக மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொண்டு, அனைவருக்கும் சுதந்திர தினத் திருநாள் நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா சுதந்திர தின வாழ்த்துச்செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்