முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்சாரம் உற்பத்திசெய்ய ரூ.2196 கோடியில் ஜெயலலிதா திட்டம்-செந்தில்பாலாஜி பேச்சு

செவ்வாய்க்கிழமை, 16 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

கரூர், ஆக.- 16 - கடந்த தி.மு.க ஆட்சியினால் ஏற்பட்ட கடுமையான மின்வெட்டைப்போக்க ரூ.2196 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்திசெய்ய ஜெயலலிதா திட்டம் தீட்டியுள்ளார் என்று கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி கூறினார்.
கரூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க சார்பில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசின் பட்ஜெட் விளக்கப்பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்திற்கு தொகுதி செயலாளர் திருவிகா தலைமை வகித்தார். கரூர் நகர செயலாளர் நெடுஞ்செழியன் அனைவரையும் வரவேற்றார். இக்கூட்டத்தில் அ.தி.மு.க கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை எம்.பி., சிறப்புரை ஆற்றினார். இதனைத்தொடர்ந்து பேசிய கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி கூறியதாவது:-
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜெயலலிதா 1.83 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 20 கிலோ அரிசியை இலவசமாக வழங்கினார். தமிழக வரலாற்றிலேயே சாதனை முயிற்சியாக 2011-2012 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் ரூ.1 லட்சம் கோடியில் தமிழக மக்களின் வாழ்க்கைத்தரம் உயர திட்டங்களை அறிவித்துள்ளார்.
இதில் முதியோர் உதவித்தொகையை ரூ.500-லிருந்து ரூ.1000-மாக உயர்த்தி அதற்காக ரூ.2892 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். கடந்த தி.மு.க ஆட்சியினால் ஏற்பட்ட கடுமையான மின்வெட்டைப்போக்க ரூ.2196 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்திசெய்ய திட்டம் தீட்டியுள்ளார். இதன்மூலம் 2012-ம் ஆண்டு முதல் மின்வெட்டில்லா மாநில தமிழகம் இருக்கும் என அறிவித்துள்ளார்.
இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் திட்டத்திற்கு ரூ.1280 கோடி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் சத்துணவு திட்டத்திற்கு ரூ.1246 கோடி, சூரிய சக்தி பசுமை வீடுகள் கட்டும் திட்டத்திற்கு ரூ.992 கோடி, பள்ளி-கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்க ரூ.589 கோடி என தமிழக ஏழை-எளிய மக்களின் வாழ்க்கைத்தரம் உயர நிதி ஒதுக்கீடு செய்து தயாரிக்கப்பட்ட பட்ஜெட்டை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அளித்துள்ளார். மேலும், சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.1 கோடியில் இருந்து ரூ.2 கோடியாக உயர்த்தி அறிவித்துள்ளார்.
கடந்த மைனாரிட்டி தி.மு.க ஆட்சியில் போக்குவரத்து பணியாளர்களுக்கு சம்பளம் கூட போட பணம் இல்லை என்றனர். ஆனால், இன்று முதல்வர் ஜெயலலிதா போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளம் போட கடந்த ஜூன் மாதத்திற்கு 60 கோடியும், ஜூலை மாதத்திற்கு ரூ.50 கோடியும் நிதி ஒதுக்கியுள்ளார்கள். மேலும் 3 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க ரூ.125 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் தொகுதி இணை செயலாளர்கள் விஜயகுமார், தியாகராஜன், மாவட்ட பொருளாளர் முரளி, மாவட்ட துணை செயலாளர் காளியப்பன், முன்னாள் மாவட்ட செயலாளர் சாகுல் அமீது, இளைஞர் அணி செயலாளர் பாஸ்கரன், பாசறை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், தலைவர் சுந்தர்ராஜ், சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை செயலாளர் சாதிக், தாந்தோணி நகர்மன்ற தலைவர் ரேவதி ஜெயராஜ், ஒன்றிய செயலாளர் விஜயபாஸ்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நிறைவாக சரவணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்