முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு வாரத்திற்குள் கலைஞர் டி.வி. சொத்து முடக்கம்?

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

புது டெல்லி,ஆக.19 - கலைஞர் டி.விக்கு சொந்தமான சொத்துக்கள் இன்னும் ஒரு வார காலத்திற்குள் முடக்கப்படும் என்று அமலாக்கப்பிரிவு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடு காரணமாக ரூ. 1.76 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத்ராய் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான புலனாய்வை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சிங்வி, கங்குலி ஆகியோர் கண்காணித்து வருகின்றனர். சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முனைப்பு காட்டி வருகின்றனர். அலைவரிசை ஊழல் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதி ஷைனி, வழக்கை விசாரித்து வருகிறார். இதுவரை 2 குற்றப்பத்திரிக்கைகள் சி.பி.ஐ. தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 3 வது குற்றப் பத்திரிக்கை வெகு விரைவில் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. இந்த 3 வது குற்றப்பத்திரிக்கையில் முன்னாள் தொலை தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் பெயரும் அடிபடுகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, கனிமொழி உள்ளிட்டோர் திகார் சிறையில் உள்ளனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட யாருக்கும் இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை. அலைவரிசை ஊழலில் பயனடைந்த நிறுவனங்களில் கலைஞர் டி.வி.யும் ஒன்றாகும். ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டது, இந்த நிறுவனம் பிறகு எடிசலாட் டி.பி. ரியாலிட்டி என்ற பெயரில் செயல்பட தொடங்கியது. டி.பி. ரியாலிட்டி முன்னாள் நிர்வாக இயக்குனர் சாகித் உஸ்மான் பல்வா, கலைஞர் டி.விக்கு சுமார் ரூ. 200 கோடியை கொடுத்துள்ளார். இந்த தொகை நேரடியாக கொடுக்கப்படவில்லை. டி.பி. ரியாலிட்டிசிடம் இருந்து குசேகான் நிறுவனத்துக்கு முதலில் பணம் வழங்கப்பட்டுள்ளது. பிறகு இந்த நிறுவனம் சினியுக் நிறுவனத்துக்கு தொகையை கொடுத்துள்ளது. சினியுக் நிறுவனத்திடம் இருந்து கலைஞர் டி.விக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் வாங்கியது கடன்தான். அதை திருப்பி வட்டியுடன் கொடுத்து விட்டோம் என்று கலைஞர் டி.வி.சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. ஆனால் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இதனை ஏற்கவில்லை. சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பொருளாதார நிலவரங்களை ஆய்வுக்கு உட்படுத்திய போது கலைஞர் டி.விக்கு வந்த பணம் கடனல்ல. அலைவரிசை ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்றதையடுத்து கொடுக்கப்பட்ட லஞ்சம்தான் என்ற முடிவுக்கு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் வந்துள்ளனர். பேலன்ஸ்சீட்டுகளை தாக்கல் செய்யுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் இந்த நிறுவனங்கள் இதுவரை சமர்ப்பிக்கவில்லை. இந்நிலையில் கலைஞர் டி.விக்கு சொந்தமான ரூ. 200 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்குவது என அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். இந்த நடவடிக்கைகள் இன்னும் ஒரு வார காலத்திற்குள் மேற்கொள்ளப்படும் என அமலாக்கப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்