முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்த நிதியாண்டில் 8 புதிய தொழிற் பேட்டைகள்

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஆக.19 - இளைய தொழில் முனைவோர்கள் குறிப்பாக முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்கு ஊக்கமும், பயிற்சியும் அளிக்கும் வகையில்,  சிட்கோ நிறுவனத்தை ஆற்றல் மிக்க நிறுவனமாக மாற்ற 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளும் கூடிய வகுப்பறைகள், நூலகம், கணினி மையம், கூட்ட அரங்கம் மற்றும் தங்கும் விடுதி வசதிகளுடன் கூடிய ஒரு நவீன பயிற்சி வளாகம் அமைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், நிதியமைச்சர் 4.8.11 அன்று பேரவைக்கு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளார் என்று அமைச்சர் சி.சண்முகவேலு தெரிவித்தார்.

நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் சி.சண்முகவேலு பதில் அளித்து பேசியதாவது:-

கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி, அவர்களது பொருளாதார நிலையினை மேம்படுத்தும் பொருட்டு, இத்துறையில் தொழிற் கூட்டுறவு சங்கங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. ஜூலை மாதம் 2011 முடிய, இத்துறையில் 347 தொழிற் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2010-2011 ஆம் ஆண்டில் எய்திய விற்பனையைவிட, நடப்பாண்டில் மொத்தம் 700 கோடி ரூபாய் மதிப்பிற்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதனை எய்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நீலகிரி மாவட்ட மக்களுக்கு, வாழ்வாதாரம் அளிக்கும் முக்கிய தொழிலாக, தேயிலை தொழில் விளங்குகிறது. மொத்தம் உள்ள 60 ஆயிரம் சிறு தேயிலை விவசாயிகளில், சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு விவசாயிகள், நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் 15 தேயிலை தொழிற் கூட்டுறவு தொழிற்சாலைகளில், உறுப்பினர்களாக இருந்து பயன்பெற்று வருகின்றனர்.

எப்பொழுதெல்லாம் சந்தையில் தேயிலைத்தூளின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து, சிறு தேயிலை விவசாயிகள் துன்பப்படுகிறார்களோ அப்பொழுதெல்லாம் தமிழக முதல்வர் தலைமையிலான அரசு, சிறு தேயிலை விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதற்காக, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

தேயிலை சிறு விவசாயிகளின் துயர் துடைக்கும் பொருட்டு, பசுந்தேயிலைக்கான நியாயமான விலை தொடர்ந்து கிடைக்க வேண்டுமென்ற அடிப்படையில், இந்த ஆண்டு மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை, பசுந்தேயிலைக்கு 2.8.11 அன்று கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய் கூடுதலாக வழங்க, முதல்வர் ஜெயலலிதா தாயுள்ளத்துடன் ஆணையிட்டு, இதற்காக 11.20 கோடி ரூபாய் ஒப்பளித்துள்ளார்கள்.

சேகோசர்வ் எனப்படும் சங்கம் 364 உறுப்பினர்களை கொண்டு, சேலத்தில் இயங்கி வருகிறது. ஜூலை மாதம் 2011 முடிய இச்சங்கமானது 109.66 கோடி ரூபாய் மதிப்பிற்கு விற்பனை செய்து, 110.47 இலட்சம் ரூபாய் இலாபம் அடைந்துள்ளது.

தொழிற் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் குறு, சிறு தொழில் முனைவோர்களுக்கு நிதி வசதி வழங்குவதற்காக, ஏற்படுத்தப்பட்ட தாய்கோ வங்கியானது, தற்பொழுது 44 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. 2010-2011 ஆம் ஆண்டில் பொது மக்களிடமிருந்து ரூ.688.72 கோடி அளவிற்கு வைப்புத் தொகை திரட்டிட ரூ.499.51 கோடி அளவுக்கு பல்வகை கடன்கள் வழங்கியுள்ளது. இவ்வாண்டில் இவ்வங்கி ரூ.248.80 இலட்சம் லாபம் ஈட்டியுள்ளது. இவ்வங்கியின் மூலமாக குறு மற்றும் சிறு தொழில் முனைவோர்கள் தொழில் துவங்குவதற்கு, அதிக கடன் வசதிகள் வழங்க, முதல்வர் ஜெயலலிதா துறை ஆய்வில் அறிவுறுத்தியுள்ளார்.

தற்பொழுது தென்னை நார் நேரடியாக நமது மாநிலத்திலிருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்த மூலப்பொருளை நமது மாநிலத்திலேயே பயன்படுத்தி, மதிப்பு கூட்டப்பட்ட கயிறு பொருட்களின் உற்பத்தியை அதிகரித்து, அதன் மூலம் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு உண்டான திட்டங்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆலோசனைப்படி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களின் முன்னேற்றத்திற்காகவும், தொழில் வளர்ச்சிக்காகவும் ஏற்படுத்தப்பட்ட சிட்கோ நிறுவனம் நவீன முறையில் சீரமைக்கப்பட்டு, தொடர் மேம்பாட்டு நடவடிக்கைகள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் முன்னுரிமை அளித்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏற்கனவே உள்ள 92 தொழிற்பேட்டைகளை தவிர, மேலும் 8 புதிய தொழிற்பேட்டைகளை சிட்கோ நிறுவனமானது தஞ்சாவூரில் பாலயப்பட்டியிலும், வேலூரில் வாணியம்பாடியிலும், விருதுநகரில் மாநகர் புறத்திலும், புதுக்கோட்டையில் மாத்தூரிலும், திருப்பூரில் இராசாத்தவலசுவிலும், விழுப்புரத்தில் வெண்மணி ஆத்தூரிலும், தூத்துக்குடியில் பிடாநேரியிலும், தேனியில் மரிக்குண்டு கிராமத்திலும் புதிய தொழிற்பேட்டைகளை இந்த நிதியாண்டிற்குள் அமைக்க திட்டமிட்டுள்ளது. 

முதல்வர் ஜெயலலிதா ஆணையின்படி சிட்கோவை புனரமைக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, இதற்கான வழிமுறைகள் ஆராயப்பட்டு, இக்குழுக்களின் பரிந்துரைகளின்படி எளிமையான முறையில் தொழில் முனைவோருக்கு உதவும் நிறுவனமாக சிட்கோவை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிட்கோ தலைமை அலுவலக கட்டிடம் கிண்டி தொழிற்பேட்டையில் புதியதாக கட்ட கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் 2007-ம் ஆண்டில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக கட்டிடப் பணிகள் தொடக்க நிலையிலேயே உள்ளன. அடுத்த ஆண்டு இறுதிக்குள் கட்டி முடிக்க தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நில ஒதுக்கீட்டிற்கான விலைக் கொள்கை, நில வங்கி உருவாக்குதல், அது தொடர்பான நடைமுறைகளை எளிமையாக்குதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் சிட்கோ நிறுவனத்தின் செயல்பாடுகளை சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

டான்சி நிறுவனத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, அரசு துறைகளான பள்ளிக்கல்வித்துறை, மின்துறை, போக்குவரத்துத்துறை, நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித்துறை உட்பட அனைத்து துறைகளுக்கும் தேவைப்படும் தளவாட பொருட்களை இந்நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யுமாறு அமைச்சர்களை கேட்டுக் கொள்கிறேன்.

இளைய தொழில் முனைவோர்கள் குறிப்பாக முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்கு ஊக்கமும், பயிற்சியும் அளிக்கும் வகையில், இந்நிறுவனத்தை ஆற்றல் மிக்க நிறுவனமாக மாற்ற 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளும் கூடிய வகுப்பறைகள், நூலகம், கணினி மையம், கூட்ட அரங்கம் மற்றும் தங்கும் விடுதி வசதிகளுடன் கூடிய ஒரு நவீன பயிற்சி வளாகம் அமைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், நிதியமைச்சர் 4.8.11 அன்று பேரவைக்கு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் இந்த மாமன்றத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு  அமைச்சர் சி.சண்முகவேலு  பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்