முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சரக்குசேவை வரிவிதிப்பு மசோதாவை எதிர்க்க வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 23 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஆக.23 -  மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள சரக்குசேவை வரிவிதிப்பு மசோதாவை ஒரே குரலில் எதிர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் அல்லாத மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:​  சரக்குகள் மற்றும் சேவை வரிகள் (ஜி.எஸ்.டி.) தொடர்பாக அரசியல் சட்ட திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளதை ங்கள் அறிவீர்கள். தற்போது, இந்த மசோதா நிதிக்கான பாராளுமன்ற நிலைக்குழுவின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த சட்ட திருத்த மசோதா மீது கருத்துக்களையும், பரிந்துரைகளையும் தெரிவிக்குமாறு நிலைக்குழுவின் தலைவர் கேட்டுக் கொண்டு இருக் கிறார். அதன்படி பாராளுமன்ற நிலைக்குழு தலைவருக்கு, தமிழ்நாடு அரசு தனது பரிந்துரைகளையும், கருத்துக்களையும் அனுப்பி வைத்திருக்கிறது. மாநில அரசுகளின் நிதி சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையில், இந்த விஷயத்தில் தலையிட்டு சுமூக தீர்வு காணுமாறு பிரதமர் மன்மோகன்சிங்கிடமும் கேட்டுக் கொண்டுள்ளேன். மாநில அரசுக்கு நிறைய வருவாய் ஆதாரங்களாக இருப்பவை விற்பனை மற்றும் வாட் வரியும்தான் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், இதிலும் கைவைக்க, ஆக்கிரமிக்க மத்திய அரசு முன்வந்துள்ளது. மறைமுக வரி சீர்திருத்தம் என்ற பெயரில் மாநில அரசுக்கு வருவாய் ஆதாரங் களாக உள்ள விற்பனை மற்றும் வாட் வரியையும் பறித்துக்கொள்ள மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இது தொடர்பாக மாநில நிதிக்கான அதிகாரம் அளிக்கப்பட்ட கமிட்டி மற்றும் நிதி அமைச்சர்கள் ஆகியோருடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில், மத்திய அரசிடம் பல கவலைகள் தெரிவிக்கப் பட்டன. மாநில அரசுகள் பல தொடர்ந்து தங்களது ஆட்சேபனைகளை தெரிவித்து வருகின்றன. ஆனால், இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல், வரிகள் தொடர்பான சட்ட திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. மாநில அரசுகளின் முழு ஒத்துழைப்பும் சம்மதமும் இல்லாமல், சட்ட திருத்தபடி நடைமுறைப்படுத்த முடியாது என்பதை தெரிவித்திருந்தும், எதேச்சதிகாரமாக இதை நிறைவேற்ற மத்திய அரசு முயலுகிறது. எனவே மசோதா வடிவில் இருக்கும்போதே இந்த சட்டத்தை கடுமையாக எதிர்ப்பது அவசியமாகிறது. மாநிலத்தின் நிதி சுதந்திரம் எந்த வகையில் பாதிப்பதையும் பொறுத்துக் கொள்ள முடியாது. எனவே இந்த விஷயத்தில் நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஒரே குரலில் மத்திய அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மாநில அரசின் உரிமையை பாதுகாக்க நாம் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம் ஆகும். இவ்வாறு அந்த கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்