முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6 விளையாட்டுகளுக்கு முதல்வர் கோப்பை போட்டி

சனிக்கிழமை, 27 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.27 - அத்லடிக்ஸ், ஹாக்கி, கூடைப்பந்து, கால்பந்து, கபாடி மற்றும் வாலிபால் ஆகிய 6 விளையாட்டுகளில் மாநில அளவில் முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் ரூ.5.18 கோடி செலவில் நடத்தப்படும் என அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார். தமிழக சட்டசபையில் நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானியக்கோரிக்கை மீது பதிலளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், இத்துறைக்கான புதிய அறிவிப்புகள் குறித்து அறிவித்ததாவது:

முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான குழு விளையாட்டு போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, கபாடி மற்றும் வாலிபால் ஆகிய விளையாட்டுகள் ரூ.4.02 கோடி செலவில் நடத்தப்படும். இப்போட்டிகளில் முதல் பரிசு வெல்பவர்களுக்கு தலா ரூ.1.00 லட்சமும், இரண்டாம் பரிசு வெல்பவர்களுக்கு தலா ரூ.75 ஆயிரமும், மூன்றாவது பரிசு வெல்பவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும், நான்காவது பரிசு வெல்பவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.

முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான அத்லடிக் போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ரூ.1.16 கோடி செலவில் நடத்தப்படும். இப்போட்டிகளில் முதல் பரிசு வெல்பவர்களுக்கு தலா ரூ.1.00 லட்சமும், இரண்டாம் பரிசு வெல்பவர்களுக்கு தலா ரூ.75 ஆயிரமும், மூன்றாவது பரிசு வெல்பவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.

நலிவடைந்த நிலையிலுள்ள முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியும் ரூ.1000-லிருந்து ரூ.3000-மாக உயர்த்தப்படுகிறது.

பார்வையாளர்களுக்கான இருக்கை வசதி, மரத்தாலான தரைத்தளம் மற்றும் மின்னொளி வசதி ஆகியவற்றை உள்ளடக்கிய உள்விளையாட்டரங்கங்கள் 20 மாவட்டங்களில் ரூ.30.00 கோடி செலவில் அமைக்கப்படும். முதல் கட்டமாக ஐந்து மாவட்டங்ளில் அமைத்திட ரூ.7.50 கோடி ஒதுக்கப்படும்.

தமிழ்நாட்டின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் திருச்சி மாநகரில் 8 ஓடுகளப்பாதைகளுடன் கூடிய செயற்கை இழையிலான அத்லடிக் ஓடுபாதை, மூடிய வடிகால் வசதி மற்றும் மின்னொளி வசதிகளுடன் ரூ.6.00 கோடி செலவில் அமைக்கப்படும்.

மதுரையில் பன்னாட்டுத்தரம் வாய்ந்த செயற்கை இழை வளைகோல் பந்து மைதானம், நீர்த்தெளிப்பான், மூடிய வடிகால் வசதி மற்றும் மின்னொளி வசதிகளுடன் ரூ.6.00 கோடி செலவில் அமைக்கப்படும். திருச்சி, திருவண்ணாலை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் கால்வாலியம் செயற்கை தகடுகளாலான மேற்கூரை வசதியுடன் கூடிய கூடைப்பந்து மற்றும் வாலிபால் விளையாட்டு மைதானங்கள் ரூ.1.50 கோடி செலவில் அமைக்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளான உடல் ஊனமுற்றோர், கண் பார்வையற்றோர், மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் காது கேளாதோர் ஆகியோருக்கு ரூ.15.00 லட்சம் செலவில் மாநில அளவிலான தடகள போட்டிகள் நடத்தப்படும்.

தற்போது உள்ள 139 விளையாட்டுப் பயிற்றுநர் பணியிடங்களுடன் கூடுதலாக 238 பயிற்றுநர்கள் படிப்படியாக பணியமர்த்தப்படுவார்கள்.

அனைத்து மாவட்ட விளையாட்டரங்கங்களிலும் அந்தந்த மாவட்டத்திலுள்ள திறமையான விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தினசரி ஊட்டச்சத்து உணவு மற்றும் போக்குவரத்துப் படியுடன் கூடிய தினப்பயிற்சி திட்டம் ரூ.2.60 கோடி செலவில் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 2,800 விளையாட்டு வீரர்கள் பயனடைவர்.

மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதி வீரர்களிலிருந்து 100 பயிற்சியாளர்கள் விளையாட்டு பயிற்சியினை மேற்கொள்ள ஏதுவாக அந்தந்த மாவட்டங்களிலுள்ள விளையாட்டரங்கங்களில் உணவு, போக்குவரத்துச் செலவினம் மற்றும் சீருடையுடன் கூடிய வார இறுதி பயிற்சி முகாம்கள் ரூ.5.06 கோடி செலவில் நடத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் 3600 கிராமப்புற விளையாட்டு வீர்ரகள் பயனடைவர்.

உலகத் திறனாளர்களை கண்டறியும் திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளிலிருந்து கண்டறியப்படும் 3240 இளம் விளையாட்டுத்திறனாளிகளுக்கு தலா ரூ.6,000-வீதம் சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.1.94 கோடி வழங்கப்படும்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களுக்கு முதற்கட்டமாக 8 வாகனங்கள் ரூ.48.00 லட்சம் செலவில் வழங்கப்படும்.

கிராம அளவில் விளையாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு அங்கு சிறப்பாக திகழும் விளையாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு, கிராம விளையாட்டு மையங்கள் 31 மாவட்டங்களில் ஏற்படுத்தப்படும். இங்கு மைதான வசதிகள், விளையாட்டு உபகரணங்கள், விளையாட்டு சீருடைகள் மற்றும் உயர்தர போட்டிகளில் பங்கேற்க விளையாட்டு பயிற்சி ஆகியவை வழங்கிட ரூ.62.00 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.

கோயம்புத்தூர் நேரு விளையாட்டரங்களில் 30 மீட்டர் உயர கோபுரத்துடன் கூடிய மின்னொளி வசதி இரண்டு எண்ணிக்கை 75 கே.வி.ஏ ஜெனரேட்டருடன் ரூ.1.67 கோடி செலவில் அமைக்கப்படும்.

தமிழ்நாட்டில் தேசிய அளவிலான சேம்பியன்ஷிப் போட்டிகளை நடத்தவும், தமிழ்நாடு மாநில அணிகள் தேசிய சேம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கு பெறுவதற்காகவும் மாநில விளையாட்டுச் சங்கங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதிஒதுக்கீடு ரூ.65.00 லட்சத்திலிருந்து ரூ.1.30 கோடியாக உயர்த்தப்படுகிறது.

தற்பொழுது மாநில அளவிலான பாரதியார் தின மற்றும் குடியரசு தினவிளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு வழங்கப்பட்டு வந்த பரிசுத் தொகை ரூ.12.00 லட்சத்திலிருந்து ரூ.29.86 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

தேசிய அளவில் பதக்கம் பெறும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் எஸ்டிஏடி உதவித்தொகை ரூ.19.88 லட்சத்திலிருந்து ரூ.39.76 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

மாவட்டத் தலைநகரங்களிலுள்ள மாவட்ட விளையாட்டு வளாகங்களைச் சிறந்த முறையில் பராமரிப்பு செய்திட ஒதுக்கப்பட்ட நிதி ரூ.16.00 லட்சத்திலிருந்து ரூ.66.00 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

தற்போது உலக அளவில் அனைத்து விளையாட்டுக்களும், செயற்கை தளங்களில் உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்கிலும் நடைபெற்று வருகிறது. செயற்கை தளங்கள் அமைப்பது குறைந்த பராமரிப்பு செலவினம் மற்றும் ஆண்டு முழுவதும் விளையாடுவதற்கு உகந்தது. இதனை கருத்திற்கொண்டு உலகத்தரம் வாய்ந்த செயற்கை தளங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வாங்கிட ரூ.1.00 கோடி நிதிஒதுக்கப்படும்.

தமிழ்நாட்டில் கிராம இளைஞர் மேம்பாட்டு விளையாட்டுத் திட்டத்தினை செயல்படுத்திட ஒவ்வொரு ஆண்டிற்கும் ரூ.3.63 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்படும். இதற்கான மைய அரசின் பங்களிப்பு ஆண்டு ஒன்றுக்கு ரூ.10.55 கோடி ஆகும்.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்