முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவை விட மலேசியா பலதுறைகளில் முன்னேறியுள்ளது-மலேசிய மந்திரி

ஞாயிற்றுக்கிழமை, 6 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

நாகர்கோவில்-மார்ச். - 6 - மலேசிய வெளியுறவுத்துறை துணை மந்திரியும், மலேசிய மக்கள் முற்போக்கு முன்னணி கட்சியின் உதவி தலைவருமான கோகிலன்பிள்ளை நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது :- தமிழ்நாட்டில், பாரம்பரியம், கலாச்சாரத்தை அறிந்து கொள்ளும் வகையில் எங்கள் கட்சியை சேர்ந்த 60 மூத்த தலைவர்களுடன் தமிழ்நாட்டுக்கு ஆன்மீக சுற்றுலா வந்துள்ளோம். 

சென்னை, ராமேஸ்வரம் உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று விட்டு கன்னியாகுமரி வந்துள்ளோம். அடுத்ததாக திருச்சி செல்கிறோம். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எங்கள் பிரதமர் இந்தியாவிற்கு வந்திருந்தார். அது போல இந்திய பிரதமர் மன்மோகன்சிங் எங்கள் நாட்டுக்கு வந்தார். கடந்த ஆண்டு இங்கிருந்து ரோட்டரி மூலம் 50 பேர் மலேசியாவுக்கு வந்திருந்தனர். அவர்கள் எங்கள் நாட்டின் கலாச்சாரம், அங்கு பல்வேறு துறைகள் செயல்படும் விதம் போன்றவற்றை பார்த்து வந்தனர். தற்போது நாங்கள் இங்கு வந்துள்ளோம்.

இந்தியா - மலேசியா நட்பை மேலும் பலப்படுத்த இந்த சுற்றுலா மிகவும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன். தமிழ்நாட்டின் கலாச்சாரம் மலேசியாவிலும் உள்ளது. அதில் சிறிய மாற்றம் இருக்கிறது. மலேசியாவில் 523 தமிழ் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. அங்குள்ளவர்கள் எந்த பள்ளியிலும் சேர்ந்து படிக்கலாம். அவர்களுக்கு கல்வியில் நிறைய சுதந்திரம் உள்ளது. 

மலேசியாவில் வேலைக்கு வரும் இந்திய தொழிலாளர்கள் சில நேரங்களில் ஏமாற்றப்படுவதை மறுக்க முடியாது. ஆனால் இதுபோன்று தொழிலாளர்கள் ஏமாறாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எங்கள் நாட்டின் உள்துறை மேற்கொண்டு வருகிறது. தொழிலாளர்கள் ஏஜெண்டுகளிடம் ஏமாறாமல் இருக்கும் வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். கம்ப்யூட்டர் துறையை பொறுத்தவரையில் மலேசியாவை விட இந்தியா பல மடங்கு முன்னேறியிருக்கிறது. ஆனால் இங்குள்ள சில துறைகளை விட மலேசியா 3 மடங்கு முன்னேறியிருக்கிறது. மலேசியாவில் இரும்பு உற்பத்தி, தோட்டம், ரப்பர் தொழிற்சாலைகள் போன்றவற்றில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது ரோட்டரி ஆளுனர்கள் ஷாஜகான், ஆறுமுகபாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்