முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐகோர்ட்டுகளில் கூடுதல் பாதுகாப்பு: மத்திய அரசு அறிவுரை

சனிக்கிழமை, 10 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, செப்.10 - டெல்லி ஐகோர்ட்டில்  தீவிரவாதிகள் கடந்த 7 ம் தேதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து மாநிலங்களில் உள்ள ஐகோர்ட்டுகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுரை கூறியுள்ளது. டெல்லி ஐகோர்ட்டில் கடந்த 7 ம் தேதி தீவிரவாதிகள் சூட்கேசில் வைத்த குண்டு வெடித்து 13 பேர் பலியானார்கள்.

இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடுத்து மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் நாடு முழுவதும் உள்ள 21 ஐகோர்ட்டுகளில் கூடுதலாக பாதுகாப்பு படையினரை குவித்தும் பாதுகாப்பு சாதனங்களை அமைத்தும் கூடுதல் பாதுகாப்பு போடுமாறு மாநில அரசுகளை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளதாக அந்த அமைச்சகத்தின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐகோர்ட்டு பாதுகாப்பு விஷயங்களில் குளறுபடிகள் இருக்குமேயானால் அதை ஆய்வு செய்து அந்த குளறுபடிகளுக்கு தீர்வுகாண வேண்டும் என்றும் மாநில அரசுகளை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் கூறின. டெல்லி ஐகோர்ட்டு குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு  பல்வேறு தீவிரவாத இயக்கங்கள் பொறுப்பேற்று இ மெயில் அனுப்பியுள்ளதால் டெல்லி போலீசார் கலக்கமடைந்துள்ளனர்.

ஐகோர்ட்டு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையில் டெல்லி போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தப்படும் என்று இந்த தீவிரவாத இயக்கங்கள் மிரட்டல் விடுத்துள்ளன.

இதுபோன்ற காரணங்களால் மாநில அரசுகளை மத்திய அரசு உஷார்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்