முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏர்செல் விற்பனை விவகாரம் தயாநிதிமாறனிடம் சி.பி.ஐ.விரைவில் விசாரணை

செவ்வாய்க்கிழமை, 13 செப்டம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, செப். - 14 - ஏர்செல்  நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் குழுமத்திற்கு விற்பனை செய்தது தொடர்பாக முன்னாள் தி.மு.க. மத்திய அமைச்சர் தயாநிதி மாறனிடம் விரைவில் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது. மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் குழுமத்திற்கு ஏர்செல் நிறுவனத்தை விற்பனை செய்யும்படி ஏர்செல் நிறுவன முன்னாள் தலைவர் சிவசங்கரனை வற்புறுத்தியதாக தயாநிதிமாறன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தயாநிதிமாறன் ராஜினாமா செய்தார்.  ஏர்செல் நிறுவனத்தை மேக்ஸிஸ் குழுமத்திற்கு விற்பனை செய்தது தொடர்பாக சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. நேற்று மேக்ஸிஸ் குழுமத்தின் உயர் அதிகாரி சி.பி.ஐ. முன் ஆஜராகி விளக்கமளித்தார். அதனையடுத்து முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.  ஏர்செல் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகள் மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் குழுமத்திற்கு நிர்பந்தத்தின்பேரில் விற்பனை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்காக ஏர்செல் நிறுவனத்திற்கு உரிமம் வழங்குவது வேண்டுமென்றே தாமதம் செய்ததாக தயாநிதி மாறன் மீது குற்றச்சாட்டு உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மேக்ஸிஸ் குழுமத்தைச் சேர்ந்த அஸ்ட்ரோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரால்ப் மார்ஷலிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று டெல்லியில் விசாரணை நடத்தினர். ஏர்செல் நிறுவனத்தின் பங்கை வாங்கியது, அதற்கு கைமாறாக மாறன் குடும்பத்திற்கு சொந்தமான சன் டி.வி.யில் முதலீடு செய்தது உள்ளிட்டவை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு மார்ஷல் விளக்கமளித்ததாக தெரிகிறது. தயாநிதி மாறன் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்திற்கு அனுமதிக் கடிதம் வழங்குவது வேண்டுமென்றே தாமதம் செய்யப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் சி.பி.ஐ.  தெரிவித்திருந்தது. மேக்ஸிஸ் நிறுவனத்திற்கு ஏர்செல் நிறுவன பங்குகள் விற்கப்பட்ட பிறகு அந்த குழுமத்தைச் சேர்ந்த அஸ்ட்ரோ நிறுவனம் சன் டி.வி.யில் முதலீடு செய்ததாகவும் சி.பி.ஐ. தெரிவித்தது. தயாநிதிமாறன் உத்தரவின் பேரிலேயே ஏர்செல் நிறுவனத்தின் சார்பில் அதன் தலைவர் சிவசங்கரன் சமர்ப்பித்த ஆவணங்களின் மீது முடிவெடுப்பது தாமதிக்கப்பட்டதாக தயாநிதி மாறனின் உதவியாளர்கள் சி.பி.ஐ.யிடம் தெரிவித்திருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 2005 - 2006 ம் ஆண்டில் தயாநிதி மாறன் தகவல் தொடர்புத்துறை  அமைச்சராக இருந்த போது ரால்ப் மார்ஷல் பலமுறை அவரை சந்தித்து பேசியதாகவும் தெரியவந்திருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தன்னிடம் இருந்த பங்குகளை மேக்சிஸ் குழுமத்துக்கு விற்க வேண்டும் என்று நிர்ப்பந்திப்பதற்காகவே தொலைத்தொடர்பு உரிமங்கள் கோரி தாம் சமர்ப்பித்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக சிவசங்கரன் குற்றம் சாட்டியிருந்தது நினைவிருக்கலாம். மேக்சிஸ் குழுமத்துக்கு பங்குகள் விற்கப்பட்ட பிறகு ஏர்செல் நிறுவனத்திற்கு சொந்தமான டிஸ்நெட் வயர்லெஸ் நிறுவனத்திற்கு 14 தொலைத் தொடர்பு உரிமங்கள் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

சன் குழுமம் சார்பில் மேக்சிஸ் நிறுவனத்தில் பெரும் முதலீடு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த மேக்சிஸ் மூலம் ஏர்செல் நிறுவனத்தை சன் குழுமம் கட்டுப்படுத்தியதாகவும் புகார்கள் உள்ளன. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் தயாநிதி மாறன் தொடர்ந்து மறுத்து வருகிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்