முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் மோடி செல்வாக்கு அதிகரிப்பு அகில இந்திய பா.ஜ. தலைவராகிறார்

செவ்வாய்க்கிழமை, 13 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, செப்.- 14 - குஜராத்தில் கடந்த 2002 ம் ஆண்டு நடந்த கலவர வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை அடுத்து முதல்வர் நரேந்திர மோடியை தேசிய அரசியலுக்கு கொண்டுவர பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. அவரை பா.ஜ.க. தலைவராக்கவும் முயற்சிகள் நடந்துவருவதாக தெரிகிறது.  குஜராத்தில் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பின்னர் அம்மாநிலத்தில் கலவரம் வெடித்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்தை ஆரம்பத்திலேயே மோடி கட்டுப்படுத்தாததால்தான் இந்த அளவுக்கு உயிர்ப்பலி நடந்ததாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் ராகவன் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது. அந்த குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் முதல்வர் மோடி மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் அளவுக்கு ஆதாரங்கள் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.  இந்த நிலையில் குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத்தில் குல்பர்க் சொசைட்டியில் நடந்த பயங்கர வன்முறையில் 69 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த படுகொலை சம்பவத்தில் நரேந்திரமோடிக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக விசாரிக்க மூத்த வழக்கறிஞர் ராஜுராமச்சந்திரனுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ராமச்சந்திரன் விசாரித்து அறிக்கையை சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்தார். அதில் மோடிக்கு வன்முறையில் தொடர்பில்லை என்று சிறப்பு விசாரணை குழு கூறிய கருத்தை அவர் வன்மையாக கண்டித்துள்ளதாக தெரிகிறது. மேலும் ராமச்சந்திரன் அறிக்கை மீது சுப்ரீம் கோர்ட்டு தனது உத்தரவை பிறப்பித்தது. நீதிபதிகள் ஜெயின், சதாசவம், அப்தாப் ஆலம் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் டிவிசன் பெஞ்ச் அளித்துள்ள தீர்ப்பில் சிறப்பு விசாரணை குழு தனது இறுதி விசாரணை அறிக்கையை அகமதாபாத் கீழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும், இதை கீழ்கோர்ட் மாஜிஸ்திரேட் விசாரித்து முதல்வர் நரேந்திரமோடியையும் விசாரிக்க வேண்டுமா? அல்லது குல்பர்க் சொசைட்டி எரிக்கப்பட்டதில் பலியான காங்கிரஸ் எம்.பி.யின் மனைவி ஷாகியா ஜாப்ரின் வழக்கை முடித்துவிட வேண்டுமா? என்பதை முடிவு செய்ய வேண்டும். மோடிக்கு எதிரான வழக்கை முடித்துக்கொள்ள மாஜிஸ்திரேட் நினைத்தால் இஸன் ஜாப்ரியின் விதவை மனைவியை அழைத்து அவர் கருத்தை கேட்க வேண்டும். இந்த வழக்கை இனியும் நாங்கள் தொடர்ந்து மேற்பார்வையிட வேண்டிய அவசியம் இருப்பதாக கருதவில்லை என்று கூறிவிட்டனர். 

இதனையடுத்து இந்த விவகாரத்தில் முதல்வர் மோடி நிம்மதி அடைந்துள்ளார். சுப்ரீம் கோர்ட் உத்தரவின் மூலம் மோடிக்கு தேசிய அரசியலில் ஈடுபடுவதற்கு இருந்த தடை விலகிவிட்டதாக பா.ஜ.க. கருதுகிறது. வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அவரை கட்சியின் தலைவராக்கிவிட அவரது ஆதரவாளர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். தற்போதைய பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரியின் 3 ஆண்டு பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதனால் மோடியை தலைவராக்கி அவரை முழு அளவில் தேசிய அரசியலில் ஈடுபடுத்த பா.ஜ.க.வின் ஒரு பிரிவினர் திட்டமிட்டுள்ளனர். 

அருண்ஜெட்லி உள்ளிட்ட சில மூத்த பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிஷத் ஆகியவற்றின் ஆதரவு நரேந்திரமோடிக்கு உள்ளது. அதேசமயத்தில் வரும் பாராளுமன்ற தேர்தலில் தன்னை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்திக்கொள்ளும் வகையில் எல்.கே.அத்வானி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ரதயாத்திரையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்