முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவை சட்டசபையில் அ.தி.மு.க.-தி.மு.க. உறுப்பினர்கள் மோதல்

புதன்கிழமை, 14 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுச்சேரி, செப்.- 14 - புதுவை சட்டசபையில் அ.தி.மு.க.-தி.மு.க. உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  புதுவை சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் அ.தி.மு.க. உறுப்பினர் ஓம்சக்தி சேகர் பேசினார். அவர் பேசியதாவது:- புதுவை மாநிலத்தில் கடந்த 4 நாட்களாக 2 லட்சம் பேர் பட்டினியாக கிடக்கின்றனர். கடந்த 7-ந் தேதி வழங்க வேண்டிய முதியோர் பென்சன் வழங்காததால் இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது. முதியோர், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் என பல பிரிவினரும் உணவுக்கும், மருந்துக்கும் வழியில்லாமல் இருக்கின்றனர். உடனடியாக நடவடிக்கை எடுத்து பென்சன் வழங்க வேண்டும்.  இதற்கு பதில் அளித்த முதல்வர் ரங்கசாமி, உடனடியாக கொடுக்கப்படும். இன்றே கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது தி.மு.க. உறுப்பினர் நாஜிம் குறுக்கிட்டு, கடந்த 3 நாட்களாக பென்சன் தொடர்பாக முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர் ஆகியோரிடம் பேசி வருகின்றேன். ஆனால் அ.தி.மு.க. உறுப்பினர் எந்த அடிப்படையில், எந்த விதியின் கீழ் பேசினார். சபையை முறையாக நடத்துங்கள்.  ஓம்சக்தி சேகர்: தனிப்பட்ட முறையில் அறையில் சென்று பேசக் கூடாது. சபையில் பேச வேண்டும். 

நாஜிம்: பத்திரிக்கையில் செய்தி வர வேண்டும் என்ற நோக்கத்தில் உறுப்பினர் பேசி உள்ளார். அவரை எப்படி பேச அனுமதித்தீர்கள்?(உடனே அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஒட்டு மொத்தமாக எழுந்து ஒரே நேரத்தில் பேசினர். தி.மு.க. உறுப்பினர்களும் பதிலுக்கு பேசினர். இதனால் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. சபாநாயகர் அழைப்பு மணியை அடித்தார். சமாதானமாக செல்லும் படி அறிவுறுத்தினார். ஆனாலும் சபையில் கூச்சல்-குழப்பம் நிலவியது)

ஓம்சக்தி சேகர்: தி.மு.க.வினருக்கு மக்கள் பிரச்சனையில் அக்கறை கிடையாது. 

நாஜிம்: அ.தி.மு.க. உறுப்பினர் எந்த விதியின் கீழ் பேசினார்? முதல்வர் அதற்கு எப்படி பதில் அளித்தார்? யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பேசலாமா?

சபாநாயகர்: பூஜ்ய நேரத்தில் பேசத்தான் அழைப்பு விடுத்தேன். ஆனால் உறுப்பினர் குறுக்கிட்டு பேசி விட்டார். சபையை வரைமுறையோடு நடத்த வேண்டும். உறுப்பினர்கள் தினந்தோறும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் வைத்திலிங்கம்: ஓம்சக்தி சேகர் பேசியது சரியா? எந்த அடிப்படையில் அவர் பேசினார்?

ஓம்சக்தி சேகர்: இப்போது வைத்திலிங்கம் பேசியது சரியா? மக்கள் மீது அக்கறை இருந்தால் பேசுங்கள்.

அன்பழகன்: சபையை நடத்துவது யார்? வைத்திலிங்கமா? நாஜிம்மா?

நாஜிம்: சபையை நடத்துவது யார்? என்று தெரிந்து விட்டதே.

சபாநாயகர்: உங்களுக்குள் இருக்க கூடிய பிரச்சனையெல்லாம் இங்கு வந்து பேசலாமா? பத்திரிக்கையில் செய்தி வர வேண்டும் என்பதற்காக பேசிவிட்டார்கள். 

வைத்திலிங்கம்: (அ.தி.மு.க.வினரிடம் ஆளும் கட்சி உறுப்பினர்களின் வரிசையை சுட்டிக்காட்டி) உங்களால் தானே அவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள்?

அன்பழகன்: இதை நீங்கள் அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

நாஜிம்: அ.தி.மு.க.வினர் தாங்கள் வெற்றி பெற வேண்டும் என்று தேர்தலின் போது ரங்கசாமியின் படத்தை தூக்கிக் கொண்டு அலைந்தார்கள்.

ஓம்சக்தி சேகர்: ஏன் நீங்கள் கூட ரங்கசாமியுடன் கூட்டணி சேர அலைந்தீர்கள்? முடியாததால் விட்டு விட்டீர்கள். 

ரங்கசாமி: மக்கள் மீது எல்லா உறுப்பினர்களுக்கும் அக்கறை உள்ளது. அ.தி.மு.க.வினர் கேட்டதால் பதில் சொல்லி விட்டேன். மக்கள் மீது அக்கறை உள்ளதால் அனைவரும் இந்த பிரச்சனை பற்றி கேட்கிறார்கள். இவ்வாறு விவாதம் நடந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்