முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: சி.பி.ஐ. மேலும் 15 நாள் அவகாசம் கேட்கிறது

வெள்ளிக்கிழமை, 16 செப்டம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி,செப்.- 16 - ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் 3 வது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.  2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடை சி.பி.ஐ விசாரித்து வருகிறது. முதலாவது குற்றப்பத்திரிக்கையில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, ஸ்வான் டெலிகாம் அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா, தொலைத் தொடர்பு அதிகாரி சந்தோலியா, சித்தார்த்த பெகுரா ஆகியோர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டு கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 2 ம் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்ற கலைஞர் டி.வி. பங்குதாரர்கள் கனிமொழி எம்.பி. சரத்குமார் உள்ளிட்டோர் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் யாருக்கும் ஜாமீன் கிடைக்காததால் சிறையிலேயேஇருக்கிறார்கள். 3 வது குற்றப்பத்திரிக்கை தயார் செய்யும் பணியில் சி.பி.ஐ. தீவிரமாக உள்ளது.  3 வது குற்றப்பத்திரிக்கை கடந்த மாதம் 30 ம் தேதியே கோர்ட்டில் தாக்கல் செய்யப்படுவதாக இருந்தது. ஆனால் குற்றப்பத்திரிக்கை தயாரிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டதால் நேற்று தாக்கல் செய்யப்படும் என்று சி.பி.ஐ. சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்திருந்தது. இந்த 3 வது குற்றப் பத்திரிக்கையில் பல முக்கிய பிரமுகர்கள் இடம் பெறுவார்கள் என்று பரபரப்பாக பேசி வரப்பட்ட நிலையில் 3 வது குற்றப்பத்திரிக்கை தயாரிக்கும் பணி இன்னும் முடிவடையவில்லை. மேலும் 10 அல்லது 15 நாட்கள் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் அவகாசம் கேட்க முடிவு செய்துள்ளது.  லூப் டெலிகாம், எஸ்சார் நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகளை சேர்ப்பதில் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டியதிருப்பதால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதற்கிடையே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 2004 ம் ஆண்டு முதல் 2007 ம் ஆண்டு வரை நடந்த முறைகேடு தொடர்பாக அப்போது தொலைத் தொடர்பு துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறனிடம் சி.பி.ஐ நேற்று முன்தினம் விசாரணை நடத்தியது. 

ஏர்செல் நிறுவனம் தனது சேவையை விரிவுபடுத்த லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்தது தொடர்பாக அனுமதி வழங்காமல் தயாநிதி மாறன் தாமதப்படுத்தினார் என்றும் ஏர்செல் நிறுவனம் மேக்சிஸ் நிறுவனத்திற்கு கைமாறியதும், உடனடியாக லைசென்ஸ் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது. மேலும் சன் டி.வியில் மலேசியாவின் ஆஸ்ட்ரோ நிறுவனம் ரூ. 600 கோடி முதலீடு செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பாக அதன் முதன்மை செயல் அதிகாரி ரால் மார்சிலியிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இந்நிலையில் சி.பி.ஐ. விசாரணை தயாநிதி மாறனிடம் 5 மணி நேரம் நடந்தது. அப்போது ரால்ப் மார்சிலுக்கும், தயாநிதி மாறனுக்கும் இடையே நடைபெற்ற 4 சந்திப்புகளின் தேதிகளை குறிப்பிட்டு சி.பி.ஐ. கேள்விகள் கேட்டு விசாரணையை நடத்தியது. தயாநிதி மாறனின் உதவியாளர் நம்பியாரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மலேசிய நிறுவனம் செய்த முதலீடு குறித்து கலாநிதி மாறனிடமும் டெல்லி சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் கடந்த திங்கட்கிழமை விசாரணை நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மீண்டும் தயாநிதி மாறனிடம் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்