முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

19 வயதுக்கு உட்பட்டோர் கிரிக்கெட் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது

திங்கட்கிழமை, 10 அக்டோபர் 2011      விளையாட்டு
Image Unavailable

விசாகப்பட்டினம், அக்.- 10 - 19 வயதுக்கு உட்பட்டோருக்கான நான்கு நாடுகள் ஒரு நாள் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தி கோப்பையை வென்றது. இந்தியா, ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய தீவுகள், இலங்கை ஆகிய 4 நாடுகளுக்கு இடையில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் இறுதிப் போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இந்தியாவும், இலங்கை அணியும் கோப்பையை கைப்பற்ற களமிறங்கின. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இலங்கை அணியின் பந்துவீச்சும் சிறப்பாக இருந்தது. இந்திய அணியின் துவக்க வீரர் வோஹ்ரா 2 ரன்களை மட்டும் எடுத்து டிமெல் பந்தில் ஜெயசிங்கேவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து களமிறங்கிய விகாரி நிதான ஆட்டத்தை மேற்கொண்டார். ஆனால் அவரும் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கவில்லை. அணியின் எண்ணிக்கை 9.4 ஓவர்களில் 32 ஆக இருந்தபோது 15 ரன்களை எடுத்திருந்த விகாரி, மதுசங்காவின் பந்தில்  பெர்னாண்டோவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து களமிறங்கிய தியோபிராட் 2 ரன்களை மட்டும் எடுத்து தனுஷ்காவின் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட்டானார். அதுவரை நிதான ஆட்டம் ஆடிய துவக்க வீரரும் கேப்டனுமான உன்முக்த் சந்த்தும் 14 ரன்கள் மட்டும் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். அடுத்து இறங்கிய அபராஜித், மதுசங்காவின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் திக்வெல்லவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டாக இந்திய அணி 13.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 37 ரன்களை மட்டும் எடுத்து தடுமாறியது. இந்நிலையில் ஜோடி சேர்ந்த ஸ்மித் பட்டேல், நாத் ஆகியோர் விக்கெட் வீழ்ச்சியை தடுத்து இந்திய அணியின் ஸ்கோரை நிதானமாக உயர்த்தினர். இந்த ஜோடி பார்ட்னர்ஷிப்பாக 67 ரன்களை எடுத்தது. அணியின் எண்ணிக்கை 104 ஐ எட்டியபோது 31 ரன்களை எடுத்திருந்த ஸ்மித் பட்டேல், மதுசங்காவின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த கலேரியா 4 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த ஹர்மீத் சிங், நாத்துடன் சேர்ந்து  ஓரளவு சிறப்பாக விளையாட அணியின் எண்ணிக்கை 150 ஐ கடந்தது. நாத் 55 ரன்கள் எடுத்து அபோன்சோவின் பந்தில் அவுட்டானார். இறுதியில் இளம் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 168 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சந்தீப் சர்மா ஆட்டமிழக்காமல் 8 ரன்களுடன் களத்தில் இருந்தார். இலங்கை தரப்பில் மதுசங்கா 10 ஓவர்களில் 17 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளையும், அபோன்சா 2, டிமெல், தனுஷ்கா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்கு இலங்கை அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்தனர். இலங்கை அணியின் முதல் 5 விக்கெட்டுகள் 27 ரன்கள் எடுப்பதற்குள் விழுந்தது. அதன் பிறகு ஜோடி சேர்ந்த திசாகுட்டிகே(29) மற்றும் மதுசங்கா(63) ஆகியோர்  பார்ட்னர்ஷிப் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்தாலும் இறுதியில் இலங்கை அணி 46.5 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி கோப்பையை வென்றது. இந்திய தரப்பில் சந்தீப் சர்மா 4 விக்கெட்டுகளையும், கலேரியா 3 விக்கெட்டுகளையும், அபராஜித், விகாஷ் மிஸ்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
நான்கு நாடுகள் கலந்துகொண்ட இந்த போட்டியில் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி ஆஸ்திரேலிய அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்