முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியா எளிதான வெற்றி- விராட் ஹோக்ளி, ரெய்னா அபாரம்

திங்கட்கிழமை, 24 அக்டோபர் 2011      விளையாட்டு
Image Unavailable

மும்பை, அக்.- 24 - இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி எளிதான வெற்றியை பெற்றது. இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக 3 வெற்றிகளைப் பெற்று ஏற்கனவே தொடரை வென்றுவிட்டது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4 வது ஒரு நாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் குக் மற்றும் கெய்ஸ்வெட்டர் ஆகியோர் சிறப்பான துவக்கத்தை தந்தனர். அணியின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்தபோது கேப்டன் குக், அஸ்வினின் சுழலில் சிக்கினார். அதே ரன்னிலேயே கெய்ஸ்வெட்டரும், பிரவீன் குமார் பந்தில் அவுட்டானார். இதையடுத்து ஜோடி சேர்ந்த டிராட் மற்றும் பீட்டர்சன் ஜோடி நிதானமாக ஆடி ரன் எண்ணிக்கையை உயர்த்தியது. இந்த ஜோடியை வினய்குமார் மற்றும் அஸ்வின் ஜோடி பிரித்தது. டிராட் 39 ரன்களிலும், பீட்டர்சன் 41 ரன்னிலும் அவுட்டானார்கள். பிரேஸ்னன்(45) ஓரளவு சிறப்பாக ஆடி இங்கிலாந்து அணியின் ஸ்கோர் உயர காரணமாக இருந்தார். இதன்பிறகு இங்கிலாந்து வீரர்களின் விக்கெட்டுகள் மளமளவென விழுந்தன. மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான ஆரோன் தன் பங்கிற்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்த இங்கிலாந்து அணி 46.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 220 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் பின் ஆட்டமிழக்காமல் 1 ரன்னை எடுத்திருந்தார். இந்திய தரப்பில் அஸ்வின், ஆரோன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், குமார், வினய்குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு வைக்கப்பட்டது. எளிய இலக்கை விரட்டிய இந்திய அணி துவக்கத்தில் சற்று தடுமாறியது. துவக்கத்தில் இங்கிலாந்து பந்துவீச்சாளர் பின் அச்சுறுத்தினார். இதனால் துவக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். அதன் பிறகு ஜோடி சேர்ந்த விராட் ஹோக்ளி, சுரேஷ் ரெய்னா ஜோடி இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்தது. இதனால் இந்தியாவின் வெற்றி எளிதானது. ரெய்னா 62 பந்துகளில் 80 ரன்களை குவித்தார். விராட் ஹோக்ளி ஆட்டமிழக்காமல் 86 ரன்களையும், கேப்டன் தோனி ஆட்டமிழக்காமல் 15 ரன்களையும் எடுத்தனர். இதன் மூலம் இந்திய அணி 40.1 ஓவர்களில் 223 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 4 - 0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இங்கிலாந்தில் பெற்ற தொடர் தோல்விகளுக்கு பழிதீர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்