முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீரர்கள் பொறுப்பற்ற ஆட்டம் கேப்டன் தோனி காட்டம்

திங்கட்கிழமை, 31 அக்டோபர் 2011      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா, அக்.- 31 - டுவெண்டி - 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியதற்கு பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டமே காரணம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி குற்றம் சாட்டியுள்ளார். இந்திய - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 5 ஒரு நாள் போட்டிகளில் இங்கிலாந்து அணி அனைத்து போட்டிகளிலும் தோற்று தொடரை பரிதாபமாக இழந்தது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான ஒரே ஒரு டுவெண்டி - 20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. ஈடன் கார்டனில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணிக்கு கெவின் பீட்டர்சன் தலைமை வகித்தார். இந்திய அணியின் துவக்க வீரர்களாக ரகானேவும், ராபின் உத்தப்பாவும் களமிறங்கினர். இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. முதல் ஓவரில் ரகானே ரன் எதுவும் எடுக்காத நிலையில் ஃபின் பந்தில் அவுட்டானார். அடுத்த பிரேஸ்னன் ஓவரில் 1 ரன் மட்டுமே எடுத்த உத்தப்பா விக்கெட் கீப்பரால் பிடிக்கப்பட்டு அதிர்ச்சியளித்தார். அடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் சுரேஷ் ரெய்னா ஜோடி மெதுவாக ரன்களை சேர்த்தது. இந்த ஜோடியிலும் கோலி 15 ரன்களை மட்டுமே எடுத்து பிரேஸ்னன் பந்தில் அவுட்டானார். அடுத்து மனோஜ் திவாரி, ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்தார். திவாரியும் 15 ரன்களை மட்டுமே எடுத்து பட்டேல் பந்தில் போல்டானார். நம்பிக்கையாக விளையாடிவந்த ரெய்னாவும் 39 ரன்களை எடுத்த நிலையில் ஃபின் பந்தில் பரிஸ்டோவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். திவாரி மற்றும் ரெய்னா ஆகியோர் இந்திய அணி மொத்த ரன்கள் 74 ஆக இருக்கும்போதே அவுட்டானது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ரவீந்திர ஜடேஜா ரன் எதுவும் எடுக்காமலும், யூசுப் பதான் 10 ரன்களிலும், குமார் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட்டானார்கள். இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில்  9 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்களை மட்டுமே எடுத்தது. அஸ்வின் 17 ரன்களுடனும், வினய்குமார் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஃபின் 3 விக்கெட்டுகளையும், பிரேஸ்னன் மற்றும் ரவி பொப்பாரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், பட்டேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.  120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் கால்ஸ் மற்றும் கீய்ஸ்வெட்டர் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆனாலும் அடுத்து களமிறங்கிய பீட்டர்சன் அபாரமாக விளையாடினார். இதனால் இங்கிலாந்து அணியின் வெற்றி எளிதானது. பட்டேல் 21 ரன்களையும், பொப்பாரா 14 ரன்களையும் எடுத்தனர். இதனால் இங்கிலாந்து அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் பதான், கோலி, ரவீந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இதனால் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, ஒரே ஒரு போட்டியைக் கொண்ட இந்த டுவெண்டி - 20 போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்த கேப்டன் மகேந்திரசிங் தோனி, பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டமே இந்த தோல்விக்கு காரணம் என்று குற்றம் சாட்டினார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், இந்திய வீரர்கள் ரன் எடுக்க தடுமாறினார்கள். மேலும் சரியான பார்ட்னர்ஷிப்பே அமையவில்லை என்றும் தெரிவித்தார். 120 ரன்கள் என்பது மிக எளிதான ரன். இந்த மைதானத்தில் 170 அல்லது 160 எடுக்க முடியும் என்று நான் கூறவில்லை. ஆனால் அதே நேரத்தில் ஒரு 140 ரன்களையாவது எடுத்திருக்க வேண்டும். மேலும் பீல்டிங்கில் செய்த சில தவறுகளும் இதற்கு காரணமாகிவிட்டது. பீட்டர்சன் தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி வெற்றியை உறுதி செய்தார். எங்களுக்கு துவக்கம் சிறப்பாக அமையவில்லை.  8 பேட்ஸ்மேன்களுடன் விளையாடியும் எங்களால் போதுமான ரன்களை குவிக்க முடியாமல் போனது கவலைக்குரியது. இதுபோன்ற போட்டிகளில் வீரர்கள் கடைசிவரை சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம். எங்களுக்கும் அவர்களுக்கும் இதில் மிகப்பெரிய வித்தியாசம் இருந்தது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் மிகச் சிறப்பாக இருந்தது என்றும் தோனி தெரிவித்தார். மந்தமான இந்த ஆடுகளத்தை பீட்டர்சன் நன்கு கணித்து ஆடியதால் அவர்கள் வெற்றியை தட்டிச்சென்றனர் என்றும் தெரிவித்தார். அடுத்த மாதம் நடைபெற இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடருக்கு இளம் வீரர்களை தேர்வாளர்கள் தேர்வு செய்தால் நன்றாக இருக்கும் என்றும் தோனி தெரிவித்தார். ஆனால் டெஸ்ட் போட்டித் தொடர் ஒரு நாள் போட்டிகள் போன்றதில்லை. ஆடுகளத்தில் நீண்ட நேரம் நின்று விளையாட வேண்டும் என்ற எண்ணத்துடன் வீரர்கள் களமிறங்க வேண்டும் என்றும் தோனி ஆலோசனை தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்