முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரிதி மீது கருணாநிதி மறைமுக தாக்கு

செவ்வாய்க்கிழமை, 1 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,நவ.1 - தி.மு.க. வை காட்டிக் கொடுக்க சிலர் முயலுகின்றனர் என்று அக்கட்சித் தலைவர் மு. கருணாநிதி மிகவும் ஆதங்கப்பட்டு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க.வுக்கு இப்போது 62 வயதாகி விட்டது. கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. அதற்கு முன்பு புதிய வாக்காளர்களை சேர்த்தல் மற்றும் பழைய வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிகளில் விரைந்து ஈடுபடுமாறு பொதுச் செயலாளர் அன்பழகன் அறிக்கை விடுத்துள்ளார். அந்த பணிகளை தி.மு.க.வினர் விரைந்து செய்தல் வேண்டும். தி.மு.க.வினருக்கு இப்போது ஏற்பட்டுள்ள சோதனைகள் பெரிதல்ல. எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மாநகராட்சியை கூட பிடிக்க முடியவில்லை. சட்டப் பேரவை இடைத் தேர்தலில் வாக்கு வித்தியாசம் இரு மடங்காகி விட்டது. இனி தி.மு.க. எழவே முடியாது என்றெல்லாம் கூறுகின்றனர். 

சுக வாழ்வு ஒன்றை மட்டுமே மனதில் கொண்டு பெற்ற தாயின் வயிற்றை கூர்வாள் கொண்டு குத்தி கிழிப்பதை போல துரோக சிந்தனையினர் செயலாற்ற முனைகின்றனர். கையில் காசில்லாத போது தி.மு.க.விற்கு நேர்ந்த கொடுமைகளை சந்திக்க முன் நின்றவர்கள், கையில் காசு சேர்ந்த பிறகு அதை காத்திடுவதற்காக தி.மு.க.வை காட்டிக் கொடுக்க முயலுகின்றனர். 

இது போன்ற துரோகத்தை தூள் செய்து 62 ஆண்டுகளாக தி.மு.க.வினர் இரு வண்ணக் கொடிகளை தூக்கி உயர்த்திப் பிடித்து வருகின்றனர். எனவே தி.மு.க.வை வளர்க்க உறுப்பினர்களை அணி அணியாக சேர்ப்போம். புதிய வாக்காளர்களை பட்டியலில் இணைப்போம் என்று கருணாநிதி கூறியுள்ளார். தி.மு.க துணை பொதுச் செயலாளராக இருந்த பரிதி இளம்வழுதி தி.மு.க.வில் ஜனநாயகம் இல்லை என்று தன் பதவியை ராஜினாமா செய்தார். கருணாநிதியை மீறி ஸ்டாலின் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதனால் பரிதியை குறிப்பிட்டே துரோக சிந்தனையினர் என்று கருணாநிதி கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்