முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாலை போட வந்த ரங்கசாமியை முற்றுகையிட்ட காங்கிரசார்

செவ்வாய்க்கிழமை, 1 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, நவ.1 - இந்திரா காந்தி நினைவு தினத்தையொட்டி நேற்று புதுவை அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க காங்கிரசார் இந்திரா காந்தி சிலை அருகே திரண்டு இருந்தனர். அப்போது முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாளின் ஆதரவாளர்கள் அங்கிருந்தவர்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர். அதில் பயங்கர வாத எதிர்ப்பு தினத்தில் புதுவையை காப்பாற்ற வேண்டும் என்று எழுதி குறிப்பிடப்பட்டு இருந்தது.

அப்போது இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க முதல்வர் ரங்கசாமி அங்கு வந்தார். அவர் காரை விட்டு இறங்கியதும் அங்கிருந்த காங்கிரசார் திபு திபு என்று ஓடிச்சென்று அவரை சுற்றி முற்றுகையிட்டனர். மேலும் காப்பாற்று, காப்பாற்று மத்திய அரசே புதுவையை காப்பாற்று. கைது செய், கைது செய் குண்டர்களையும், ரவுடிகளையும் கைது செய். நடவடிக்கை எடு, நடவடிக்கை எடு மத்திய அரசே புதுவை அரசு மீது நடவடிக்கை எடு என்று கோஷம் போட்டனர். 

இதனால் அங்கு திடீர் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. 

இதை பொருட்படுத்தாத முதல்வர் ரங்கசாமி அந்த கூட்டத்தில் இருந்து விலகி சிலை பீடம் படிக்கட்டில் ஏறி இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் அங்கு நடந்த பிரார்த்தனையில் கலந்து கொண்டார். 

அப்போது காங்கிரசார் எதிர்கட்சி தலைவர் வைத்திலிங்கம் தலைமையில் இந்திரா காந்தி சிலை அருகே தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் முதல்வர் எம்.டி.ஆர்.ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர்கள் பெத்தபெருமாள், நமச்சிவாயம், கந்தசாமி, காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நீல கங்காதரன், இளங்கோ, மனோகர், காங்கிரஸ் நிர்வாகிகள் ஏகேடி ஆறுமுகம், கருணாநிதி, முனுசாமி, வக்கீல் சிவசாமி, வீரமுத்து, இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் சாம்ராஜ், ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மறியலில் ஈடுபட்ட காங்கிரசாரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து காங்கிரசார் மறியலை கைவிட்டு பின்னர் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து விட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டம் காரணமாக அந்த வழியே 10 நிமிடம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. 

கடந்த இரு நாட்களுக்கு முன்பு முதல்வர் ரங்கசாமி வீடு அருகே என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இதனால் புதுவையில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டதாக காங்கிரசார் புகார் கூறினர். இந்த நிலையில் அவர்கள் முதல்வர் ரங்கசாமியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்