முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேல்முருகன் நீக்கம் - கடலூர் பா.ம.க. அலுவலகம் சூறை

புதன்கிழமை, 2 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

கடலூர், நவ.2 - பண்ருட்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், பா.ம.க. துணை பொதுச்செயலாளருமான வேல்முருகன் பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் வேல்முருகன் ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. கடலூர் நேதாஜி சாலையில் உள்ள மாவட்ட பா.ம.க. அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு அவர்கள் திரண்டனர். அவர்கள் கட்சி அலுவலகம் முன்பு இருந்த பா.ம.க. கொடி கம்பத்தை உடைத்து எறிந்தனர். டாக்டர் ராமதாசின் கட்அவுட்டை உடைத்து ரோட்டில் போட்டு தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து பா.ம.க. அலுவலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். 

பண்ருட்டியிலும் வேல்முருகனின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பணிக்கன் குப்பம் மெயின் ரோட்டில் இருந்து பா.ம.க. கொடிக்கம்பத்தை வெட்டி சாய்த்தனர். இதேபோல காடாம்புலியூர் முத்தாண்டிக்குப்பம், கீழ்க்குப்பம், கீழ்மாம்பட்டு, மருங்கூர், காட்டாண்டிக்குப்பம் ஆகிய  பகுதிகளிலும் கட்சி கொடிக்கம்பங்கள் வெட்டி சாய்க்கப்பட்டது. நெய்வேலி மந்தாரக்குப்பம் பகுதியில் உள்ள வேப்பங்குறிச்சி பஸ் நிலையம், ஜெயப்பிரியா பஸ் நிறுத்தம் ஆகிய பகுதிகளில் பா.ம.க. கொடிகளையும் அவர்கள் அகற்றினர். கடலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. தலைவர் இரா.கோதண்டபானி வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன் நீக்கப்பட்டதை கண்டித்து கடலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. கூண்டோடு கலைக்கப்படுகிறது. பொறுப்பாளர்கள் அனைவரும் கட்சியை விட்டு ராஜினாமா செய்துள்ளோம் என்று கூறியுள்ளார். 

நெய்வேலி என்.எல்.சி. பாட்டாளி ஒப்பந்த தொழிற்சங்கத்தில் 3 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். வேல்முருகன் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் தேவராஜ் ஆகியோர் சங்கத்தை கூண்டோடு கலைத்து விடுவதாக பாட்டாளி தொழிற்சங்க பேரவைக்கு தகவல் அனுப்பியுள்ளார். 

இந்நிலையில் வேல்முருகன் கட்சியை விட்டு நீக்கப்பட்டது குறித்து டாக்டர் ராமதாஸ் கூறியதாவது:-

வேல்முருகன் சமீபகாலமாக கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக பேசி வந்தார். கட்சிக்கு எதிரான கருத்துக்களை பரப்பினார். சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து அவர் தனது ஆதரவாளர்களுடன் பேசிய பேச்சுக்கள் கட்சிக்கு விரோதமாக இருந்தது. இதனூடைய டேப் எங்களிடம் இருக்கிறது. 

இதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்டோம். உயர்மட்டக்குழு விசாரணையும் நடத்தினோம். அவர் சரியான முறையில் பதில் சொல்லவில்லை. எனவே கட்சியில் உள்ள 24 உறுப்பினர்களை கொண்ட உயர்மட்டக்குழு அவரை நீக்குவது என்று முடிவெடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

கட்சியில் இருந்து நீக்கியது குறித்து வேல்முருகனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

நான் 15 வயதிலேயே வன்னியர் சங்கத்தில் சேர்ந்தேன். இயக்க நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டேன். எனது கடின உழைப்பால் நான் படிப்படியாக முன்னேறினேன்.  நான் கட்சி விரோத செயலில் ஈடுபடவில்லை. 

என்னிடம் எந்த விளக்கமும் கேட்காமலேயே நீக்கி விட்டனர். தற்போது இதற்கு மேல் எதுவும் சொல்வதற்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார். 

இந்த நிலையில் நெய்வேலி 19-வது வட்டம் கே.என்.சுப்புராயர் சாலையில் உள்ள பா.ம.க.வின் என்.எல்.சி. பாட்டாளி தொழிற்சங்க அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் நள்ளிரவு சிலர் வந்தனர். அவர்கள் வாசலில் நின்ற காவலாளி கோவிந்தராஜை தாக்கினர். பின்னர் அலுவலக கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த டி.வி. மற்றும் டெலிபோன்களை உடைத்து நொறுக்கினர். நாற்காலிகள், மேஜைகள், டியூப்லைட்டுகள் உடைக்கப்பட்டன. பீரோவை தள்ளிவிட்டு அதில் இருந்த பொருட்களை சூறையாடி விட்டு தப்பி ஓடிவிட்டனர். 

மேலும் நெய்வேலி 1-வது வட்டத்தில் இருந்து 50-வது வட்டம் வரை இருந்த பா.ம.க. கொடிக்கம்பங்கள் நள்ளிரவில் வெட்டி சாய்க்கப்பட்டன. 

சூறையாடப்பட்ட நெய்வேலி என்.எல்.சி. பாட்டாளி தொழிற்சங்க அலுவலகத்திற்கு என்.எல்.சி. பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பாட்டாளி தொழிற்சங்க தலைவர் ஜோதி பிரகாசம், பொதுச்செயலாளர் திலகர், பொருளாளர் ஏஞ்சலின் மோனிகா, அலுவலக செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் நெய்வேலி நகர செயலாளர் சக்கரவர்த்தி ஆகியோர் சூறையாடப்பட்ட அலுவலகத்தை பார்வையிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்