முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்

புதன்கிழமை, 2 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.2 - கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனையில் தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை எடுத்து தீர்வுகாண வேண்டும். என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:​கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படுவதை நிறுத்தக் கோரி அப்பகுதி மக்கள் கடந்த 2 மாதங்களாக பல வகையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 18.09.2011 அன்று நான் அங்கு நேரில் சென்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைச் சந்தித்தேன். அப்பொழுது அந்தப் பகுதி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்திய அரசு உடனடியாக அந்தப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

22.09.2011 அன்று தமிழக அமைச்சரவை கூடி மக்களின் அச்சத்தை போக்கும் வரை கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளை நிறுத்த வேண்டும் என்றும், பிரதம மந்திரியை அனைத்துக் கட்சியினரும், போராட்டக் குழுவினரும் இது சம்பந்தமாக சந்திப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரதமரையும் இக்குழு சந்தித்தது. அதற்கு பிறகு கூடங்குளம் அணுமின் நிலையம் சம்பந்தமான பிரச்சினைகளை மக்களிடம் விவாதிக்க இந்திய அரசு ஒரு நிபுணர் குழுவையும் நியமித்துள்ளது. போராட்டக் குழுவினர் இக்குழுவினை ஏற்கவில்லை.

இதற்கிடையில் இந்திய அரசு அணுமின் நிலையப் பணியாளர்கள் பராமரிப்பு பணிக்காக செல்வதை போராட்டக் குழுவினர் தடுப்பதாகவும், அமைதியாக போராட்டம் நடத்துவதாக தெரிவித்துவிட்டு, இப்பொழுது வன்முறையை உருவாக்கும் சூழ்நிலையை போராட்டக் குழுவினர் உருவாக்குகின்றனர் என்றும் மத்திய அமைச்சர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார். போராட்டம் வேறு திசைக்கு மாறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதிலிருந்து இந்திய அரசு இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்குப் பதிலாக இதை ஒரு சட்டம் ​ ஒழுங்கு பிரச்சினையாக மாற்றி போராட்டத்தை ஒடுக்குவதற்கு அடக்குமுறையைக் கையாளப்போகிறதோ என்ற அச்சம் எனக்கு ஏற்படுகிறது. தாய்மார்கள், பள்ளிப் பிள்ளைகள் உட்பட பல்லாயிரக் கணக்கான அப்பகுதி மக்கள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக அமைதியான முறையில் போராடி வருவதை அனைவரும் அறிவர். இதை உணர்ந்து இந்திய அரசு போராடும் மக்கள் பிரதிநிதிகளுடன் உடனடியாக பேசி பிரச்சினையை தீர்க்க வேண்டுமே தவிர, வேண்டுமென்றே காலம் தாழ்த்தி சிக்கலை மேலும் மேலும் வலுவடையச் செய்யும் முயற்சி இந்திய அரசு ஈடுபடுவது கண்டிக்கத் தக்கதாகும். உடனடியாக இந்தப் பிரச்சினையை தீர்க்க இந்திய அரசு முன் வரவேண்டும் என்றும், தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில்  இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்