முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம்: ஹசன் அலியிடம் விசாரணை

புதன்கிழமை, 9 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

புனே,மார்ச்.- 9 - வெளிநாட்டு வங்கிகளில் சுமார் 800 கோடி டாலர் கறுப்பு பணத்தை போட்டு வைத்திருப்பதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான குதிரை பண்ணை அதிபர் ஹசன் அலியிடம் அமலாக்கப் பிரிவினர் விசாரணை நடத்தினர். ஹசன் அலி வெளி நாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பது தெரிந்தும் அரசு ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பி மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்த விவரத்தை நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கண்டிப்புடன் உத்தரவிட்டது. 

இதையடுத்து அமலாக்கப் பிரிவினர் ஹசன் அலியின் இல்லத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அவரை விசாரணைக்காக மும்பைக்கு அழைத்து சென்றனர். இது குறித்து ஹசன் அலியின் வழக்கறிஞர் கூறுகையில், ஹசன் அலி மீது சில குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால் அவை உண்மையல்ல. வெளிநாட்டு வங்கிகளில் அவர் பணம் பதுக்கி வைத்திருப்பதாக கூறுவது முற்றிலும் தவறு. அவ்வாறு எந்த வங்கியிலும் அவருக்கு கணக்கு இல்லை. 

அவரது சொத்துக்கள் அனைத்திற்கும் முறையான கண்க்கு உள்ளது. எனவே ஹசன் அலியை அமலாக்கப் பிரிவினர் கைது செய்யவில்லை. அவரது இல்லத்தில் சோதனை நடத்திய பின் விசாரணைக்காக அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இது வழக்கமான ஒன்றுதான் என்றார். இதனிடையே கொல்கத்தாவில் உள்ள ஹசன் அலியின் கூட்டாளியான தொழிலதிபர் தபாரியா வீட்டிலும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இது தவிர குர்காவோன், ஐதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களில் உள்ள சிலரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் ஹசன் அலியுடன் தொடர்பு உடையவர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்