முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன எல்லையில் 1 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்த திட்டம்

வியாழக்கிழமை, 3 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, நவ.3 - இந்திய எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தின் அத்துமீறல் நடவடிக்கைகளை அடுத்து சீன எல்லையில் குவிப்பதற்காக ஒரு லட்சம் பேரை வேலைக்கமர்த்த இந்திய ராணுவம் ட்டமிட்டுள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் கடந்த 1962 ம் ஆண்டு நடைபெற்ற போருக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவு நீடித்தாலும்கூட சீன ராணுவம் தனது படைகளை இந்திய எல்லைப் பகுதியில் குவித்துவருகிறது. குறிப்பாக பாகிஸ்தானை ஒட்டியுள்ள இந்திய எல்லைப் பகுதியில் சீனா தனது ராணுவத்தை அதிக அளவில் குவித்து வருகிறது. மேலும் சிக்கிம், அருணாச்சலப்பிரதேசம் போன்ற எல்லைப்புற மாநிலங்களில் சீன ராணுவத்தினர் அத்துமீறல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சீன எல்லையில் இந்திய ராணுவத்தை வலுப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய ராணுவத்தை நவீனப்படுத்துவதற்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ரூ. 64 ஆயிரம் கோடிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த நிதியின்மூலம் இந்திய- சீன எல்லையில்  4 புதிய படைப் பிரிவுகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த நிதி கிடைக்கப்பெற்றதும் இந்த நவீனமயமாக்கல் மற்றும் விரிவாக்கத் திட்டங்கள் நிறைவேற்றப்படும். சீன எல்லையில் குவிப்பதற்காக 1 லட்சம் பேரை ராணுவத்தில் சேர்க்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இந்திய ராணுவத்தை நவீனப்படுத்துவதற்கும் விரிவு படுத்துவதற்கும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகத்திற்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்திருந்தது. அதன் அடிப்படையில் இந்த நிதியை மத்திய நிதி அமைச்சகம் விரைவில் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2012 ம் ஆண்டு தொடங்கி 2017 ம் ஆண்டுமுடிய உள்ள 12-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்திற்குள் இந்திய ராணுவத்தில் 90 ஆயிரம் வீரர்களை சேர்க்க இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது. சீன எல்லையில் இந்திய துருப்புகளை வலுப்படுத்துவதன் மூலம் சீன ராணுவத்தின் அத்துமீறல் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்