முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க அதிபருடன் மன்மோகன் 18-ம் தேதி சந்திப்பு

வியாழக்கிழமை, 10 நவம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், நவ.11 - அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கும் வருகிற 18 ம் தேதி பாலியில் சந்தித்துப் பேச இருக்கிறார்கள். கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சிமாநாடு வருகிற 18 ம் தேதி இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவில் நடைபெற உள்ளது. இந்த உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்த உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்த இரு தலைவர்களும் சந்தித்துப் பேச உள்ளனர். இந்த தகவலை அமெரிக்க தேசிய பாதுகாப்பு துணைத் தலைவர் பென் ரோடிஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியா வந்திருந்தபோது பிரதமர் மன்மோகன் சிங்கை, பாரக் ஒபாமா சந்தித்துப் பேசினார். அதன்பிறகு இவர்கள் இருவரும் இப்போது மீண்டும் சந்தித்துப் பேச உள்ளனர் என்றும் அவர் கூறினார். இந்த சந்திப்பின்போது ஆப்கானிஸ்தான், பொருளாதார உறவுகள், பாதுகாப்பு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். இந்தியா பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் ஒரு முக்கியமான நாடு. ஒரு பலமான ஜனநாயக நாடும்கூட. மேலும் அமெரிக்காவுக்கு இந்தியா ஒரு முக்கியமான பாதுகாப்பு கூட்டாளி. மேலும் தெற்கு ஆசியாவில் தீவிரவாதத்தை எதிர்த்து போராடும் ஒரு கூட்டாளி நாடு. எனவே அமெரிக்காவுடனான உறவில் இந்தியா ஒரு முக்கியமான பங்கை வகிக்கிறது என்ற பென் ரோடிஸ் தெரிவித்தார். 

ஒபாமாவும், மன்மோகன்சிங்கும் சந்தித்துப் பேசுவதற்கு சமீப காலங்களில் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் இப்போது அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. பிராந்திய பிரச்சனைகள், சர்வதேச பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இவர்கள் இருவரும் பாலியில் விவாதிப்பார்கள் என்றும் அவர் கூறினார். ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 

இரண்டாம் உலகப்போரின் போதிருந்தே ஆசிய பசிபிக் பிராந்திய பாதுகாப்பில் அமெரிக்காவுக்கு முக்கிய பங்கு இருந்து வருகிறது. எனவே இப்போதும் இந்த பாதுகாப்பு அவசியமாக உள்ளது என்றும் அவர் கூறினார். 

ஆஸ்திரேலியா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட இதர நாடுகளிடம் அமெரிக்கா நல்லுறவை வைத்துக்கொண்டுள்ளது என்றும் பென் ரோடிஸ் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்