முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டி: தொடரை வெல்ல இந்தியா ஆர்வம்

திங்கட்கிழமை, 5 டிசம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

அகமதாபாத், டிச. - 5 - மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி குஜராத்தின் மொடேராவில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியை வென்றால் இந்திய அணி தொடரை வென்றுவிடும். தொடரை இழக்காமல் இருக்க மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றே தீரவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.  மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு டுவெண்டி-20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை மேற்கு இந்திய தீவுகள் அணி   0 -2 என்ற கணக்கில் ஏற்கனவே இழந்துவிட்டது. இதையடுத்து நடைபெற்ற ஒரு நாள் தொடரில் 2 போட்டிகளில் வெற்றிபெற்று இந்திய அணி 2 - 0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. இதனால் இன்று  மொடேரா, சர்தார் பட்டேல் அரங்கத்தில் நடைபெறும் 3-வது ஒரு நாள் போட்டியை வென்றால் மட்டுமே தொடரை வெல்லும் வாய்ப்பு மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு நீடிக்கும். ஆனால் இந்திய அணி நாளைய போட்டியை வென்றால் தொடரை வென்றுவிடும்.  இந்திய அணியைப் பொறுத்தவரை பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் சம பலத்துடன் இருக்கிறார்கள். அதனால் நெருக்கடிக்கு ஆளானாலும் இந்திய வீரர்கள் சமாளித்து வெற்றிக்கனியை பறித்துவிடுகிறார்கள்.  மேற்கு இந்திய தீவுகள் அணியின் பேட்ஸ்மேன்கள் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் சுழற்பந்தை சமாளித்து ரன் எடுக்க திணறுகின்றனர். மேலும் இந்திய  வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் மிக வேகமாகவும் சிறப்பாகவும்  பந்துவீசி வெஸ்ட் இண்டீஸ் அணியினருக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறார். மேற்கு இந்திய தீவுகள் அணியில் பேட்ஸ்மேன்கள்   ஓரளவு சோபித்தாலும் பவுலர்கள் விக்கெட்டை வீழ்த்த திணறுவதால் அவர்களுக்கு வெற்றி எட்டாக்கனியாக இருக்கிறது.  நெருக்கடி ஏற்பட்டாலும் இந்திய பேட்ஸ்மேன்கள் விராட் ஹோக்லி, ரோகித் சர்மா ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடிவிடுகின்றனர். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்க உள்ள நிலையில் இந்திய வீரர்களின் செயல்பாடு போதுமானதாக இல்லை.  மற்ற இந்திய பேட்ஸ்மேன்களும், பவுலர்களும் தங்களது திறமையை நிரூபிக்க  வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.  இதனால் இன்றைய 3-வது ஒரு நாள் போட்டி இரு அணிகளுக்குமே ஒரு சவாலான போட்டியாக இருக்கும். 

இந்த போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது. பிற்பகல் 2.30 மணிக்கு இந்த போட்டி துவங்குகிறது. தூர்தர்ஷனிலும், நியோ கிரிக்கெட்டிலும் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்