முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவு - பிரணாப்

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, டிச. - 6 - சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவு தற்போது நிறுத்தி வைக்கப்படுவதாகவும் இந்த விஷயத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகே ஒரு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் சுஷ்மா சுவராஜ், சீதாராம் எச்சூரி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களிடம் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.  சில்லறை வணிகத்தில் 51 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிப்பது தொடர்பான முடிவை மத்திய அமைச்சரவை சமீபத்தில் எடுத்தது. மத்திய அரசின் இந்த முடிவை பல மாநில முதல்வர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக, தமிழக முதல்வர் ஜெயலலிதா, உ.பி. முதல்வர் மாயாவதி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போன்ற பெண் முதல்வர்கள் மத்திய அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். மத்திய அரசின் முடிவு அமல்படுத்தப்பட்டால் லட்சக்கணக்கான வர்த்தகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று இவர்கள் கருத்து தெரிவித்தனர். இதே கருத்தை பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே. அத்வானியும் சமீபத்தில் தெரிவித்தார்.  சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்திலும் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டார்கள். இதன் காரணமாக கிட்டத்தட்ட 9 நாட்கள் பாராளுமன்றம் ஸ்தம்பித்துப் போனது. இந்த நிலையில் மத்திய அரசு தனது முடிவை நிறுத்தி வைத்து விட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சில தினங்களுக்கு முன் கூறியிருந்தார். இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் இதனை உறுதிப்படுத்தி உள்ளார். மத்திய அரசு தன் முடிவை நிறுத்தி வைத்து விட்டதாகவும், அன்னிய முதலீடு தொடர்பாக அனைத்து எதிர்க்கட்சிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு ஒரு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தன்னிடம் பேசிய சுஷ்மா சுவராஜ் மற்றும் சீதாராம் எச்சூரி போன்ற தலைவர்களிடம் உறுதிபட தெரிவித்தார்.
இந்த முடிவை நிறுத்தி வைக்க தற்போது அரசு விரும்புகிறது. இருப்பினும் அனைத்து எதிர்க்கட்சிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு ஒரு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று பிரணாப் முகர்ஜி கூறியதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக நேற்று காலையில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சீதாராம் எச்சூரி ஆகியோருடன் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசினார். அப்போது பாராளுமன்றத்தில் இது தொடர்பாக ஏற்பட்டு வரும் அமளி குறித்து நிதியமைச்சரிடம் சுஷ்மா எடுத்துரைத்ததாக தெரிகிறது.  மேலும் இந்த விஷயத்தில் அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சுஷ்மா கேட்டுக் கொண்டார். இந்த விஷயத்தில் புதன் கிழமை பாராளுமன்றம் கூடுவதற்கு முன்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். அப்போது அரசின் முடிவை அவர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று நிதியமைச்சரிடம் சீதாராம் எச்சூரி கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. எனவே மத்திய அரசின் முடிவு தொடர்பாக பாராளுமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்படக் கூடும் என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் புதன்கிழமையன்று சபை கூடுவதற்கு முன்பாக அனைத்து கட்சி கூட்டமும் கூட்டப்படும் என்றும் தெரிகிறது.
இந்த பிரச்சினைக்கு இவ்வாறு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாலும் கூட புதன்கிழமை பாராளுமன்றம் கூடும் போது விலைவாசி உயர்வு, கறுப்பு பணம் போன்ற பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் சபையில் மீண்டும் அமளியை ஏற்படுத்தக் கூடும் என்று தெரிகிறது. ஏதாவது ஒரு பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டு பாராளுமன்றத்தை கலக்குவதே எதிர்க்கட்சிகளின் திட்டமாக உள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்