முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிதம்பரத்திற்கு எதிராக சுப்பிரமணியம்சாமி ஆவணங்கள் தாக்கல்

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜனவரி 2012      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி, ஜன.- 8 - ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிதம்பரத்திற்கு எதிராக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி ஆவணங்களை சி.பி.ஐ. கோர்ட்டில் தாக்கல் செய்தார்.  இது தொடர்பான விசாரணை வருகிற 21-ம் தேதி நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. ரூ. 1.76 லட்சம் கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில்  மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்றும் எனவே அவரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி டெல்லி பாட்டியாலா இல்லத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஜனதாகட்சித்தலைவர் சுப்பிரமணியம் சாமி ஏற்கனவே மனு செய்துள்ளார். சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோதுதான்  ஆ.ராசா தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்திருக்கிறார்.  எனவே 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிதம்பரத்திற்கும் தொடர்பு உள்ளது என்றும் எனவே சிதம்பரத்திடமும் விசாரணை நடத்த வேண்டும் என்றும்  சாமி தனது மனுவில் கூறியுள்ளார். தனது மனுவுக்கு ஆதாரமாக சில ஆவணங்களையும் சான்றுகளையும் சாமி நீதிமன்றத்தில்  தாக்கல் செய்துள்ளார். இந்த ஆவணங்கள் மற்றும் சான்றுகள் உரிய சான்றிதழ் பெறப்பட்டு  தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று சி.பி. ஐ.நீதிமன்றத்தில் சாமி தெரிவித்தார். இந்த சான்றுகள் அப்போதைய தொலை தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா 2 ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக எடுத்த முடிவுகளுக்கு அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எவ்வாறு ஒப்புதல் தெரிவித்தார், எந்த அளவுக்கு  தொடர்பு வைத்திருந்தார் என்பதையெல்லாம் தெளிவுபடுத்தும் என்று சுப்பிரமணியம் சாமி  நீதிபதி ஓ.பி.ஷைனியிடம் தெரிவித்தார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம்  தொடர்பான விலை நிர்ணயம், ஸ்வான் மற்றும் யுனிடெக் என்ற இரு கம்பெனிகளுக்கு  ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்க அனுமதி அளித்தது போன்ற விஷயங்களில் ஆ.ராசா எடுத்த முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கியதில் சிதம்பரத்திற்கு பங்களிப்பு இருந்திருக்கிறது என்பதும் இந்த சான்றுகள் மூலம் தெரிய வரும் என்றும் சாமி கூறினார்.
சாமியின் வாதங்களை கேட்ட நீதிபதி ஓ.பி.ஷைனி இந்த மனு மீதான விசாரணையை வருகிற 21-ம் தேதிக்கு பட்டியலிட்டு அன்றைய  தினம் இது தொடர்பான வாக்குவாதம் நடைபெறும் என்று அறிவித்தார்.
2008-ம் ஆண்டு ஜனவரி மாதம்15-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு  ப.சிதம்பரம் எழுதிய கடிதம் உள்ளிட்ட பல ஆவணங்களை சாமி இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங், ப.சிதம்பரம், ஆ.ராசா ஆகியோர் பங்கேற்ற கூட்டம் ஒன்றின் குறிப்புகளையும்  சாமி தனது வாதத்திற்கு ஆதாரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
தேச பாதுகாப்பு நம்பிக்கையை மீறி சிதம்பரம் குற்றம் இழைத்துள்ளார் என்றும் சாமி கூறியுள்ளார்.
தான் சமர்ப்பித்துள்ள ஆவணங்கள் மற்றும் சான்றுகள் அடிப்படையில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிதம்பரத்தையும் ஒரு குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்றும் சாமி தனது வேண்டுகோளில் கேட்டுக்கொண்டுள்ளார்.
சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்பதற்காக சாமி ஏற்கனவே இந்த நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்