முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை ஆதீனம் பட்டம் ஏற்ற 32-வது ஆண்டு விழா

செவ்வாய்க்கிழமை, 15 மார்ச் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

ஸ்ரீவில்லிபுத்தூர்,மார்ச்.15 - ஸ்ரீவில்லிபுத்தூர் வி.பி.எம்.எம். கல்லூரியில் மதுரை ஆதீனம் பட்டம் ஏற்ற 32-வது ஆண்டு விழா நடைபெற்றது. பழமையும் பெருமையும் சேர்ந்து ஆன்மீக சேவையில் பெரும் பங்காற்றி வருவது மதுரை ஆதீனம். வரலாற்று சிறப்புமிக்க இந்த மடாலயத்தின் 202-வது ஆதீனமாக ஸ்ரீ அருணகிரிநாத ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சாமிகள் உள்ளார். அவர் பதவி ஏற்று 32-வது ஆண்டு விழாவான பீடாரோகன பெருவிழா ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோயில் வி.பி.எம்.எம். கல்லூரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கணபதி பூஜையுடன் துவங்கி இரவு தீப ஆராதனை நடத்தப்பட்டது. அடுத்த நாளான நேற்று (திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. மயிலாடுதுறை சிவபுரம் வேத சிவகாமப்பாடசாலை முதல்வர் ஏ.வி. சுவாமிநாத பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் வேதவிற்பன்னர்கள் மந்திரங்களை கூறி யாக குண்டம் வளர்க்கப்பட்டது. 

மதுரை ஆதீனம் செண்டா மேளம் முழங்க யானைகள், ஒட்டகங்கள்,குதிரைகள், பசுக்கள் பவனி வர ஊர்வலம் நடைபெற்றது. முத்துக்குடையின்கீழ் அழைத்து வரப்பட்டார். பின்பு பூஜைகள் நடைபெற்று புனித நீரான கங்கை, காவிரி, யமுனை போன்ற நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கொண்டு மதுரை ஆதீனத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த விழாவில் தர்மபுரம் ஆதீனம், திருவாடுதுறை ஆதீனம், சூரியனார் கோயில் மடாதிபதி, கெளமார மடாலய ஆதீனம் ஆகியோர் கலந்துகொண்டனர். பின்பு அனைத்து திருக்கோயில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட அருட்பிரசாதங்களை மதுரை ஆதீனத்திற்கு வழங்கப்பட்டது. 

மடாதிபதிகள் அனைவரையும் வி.பி.எம்.எம். கல்லூரிகளின் சேர்மன், வி.பி.எம். சங்கர், தாளாளர் செல்வி சங்கர், துணைச்சேர்மன் தங்கபிரபு,சிந்துஜா, வேலூர் எம்.எம். குரூப்ஸ் அதிபர் மகேந்திர வர்மன், மல்லிகா, கமல்ராகவன், துர்கா மீனலோசினி, சிவகாசி தொழிலதிபர் மணிவாசகம் மற்றும் நிர்வாகிகள் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். 

பின்பு நடைபெற்ற பீடாரோகன திருவிழாவில் அனைத்து மடாதிபதிகளும் கலந்துகொண்டு ஆசி வழங்கினர். விழாவிற்கு வி.பி. எம்.எம். கல்லூரிகளின் சேர்மன் வி.பி.எம். சங்கர் வரவேற்று பேசினார். விழாவில் தரணி சர்க்கரை ஆலை அதிபர் பழனி பெரியசாமி குடும்பத்தினர்கள், ஈரோடு தீரன் சின்னமலை, அறக்கட்டளை சேர்மன் கடவுள் குருசாமி, மதுரை மங்கையர்க்கரசி கல்வி நிறுவன சேர்மன் அசோக் குமார், அடையார் ஆனந்த பவன் அதிபர் சீனிவாச ராஜா, தொழிலதிபர் வி.பி.எம். முருகன் மற்றும் மதுரை ஆதினத்தின் பக்தர்கள்,மதுரை, சென்னை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சீடர்களும் கலந்துகொண்டனர். பின்பு மதுரை ஆதீனம் ஏற்புரை வழங்கினார். விழாவை சிறப்புற நடத்திய விழா குழுவினர் மற்றும் அதன் தலைவர் வி.பி.எம். சங்கரை பாராட்டி மதுரை ஆதீனம் பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்.​

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்