முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் கார்த்திக் நடத்துவது அரசியல் சூதாட்டம்

புதன்கிழமை, 16 மார்ச் 2011      சினிமா
Image Unavailable

 

மதுரை, மார்ச்.16 - நடிகர் கார்த்திக் நடத்துவது அரசியல் சூதாட்டம் என்று அ.இ.பார்வர்டு பிளாக் கண்டனம் தெரிவித்துள்ளது.  அகில இந்திய பார்வர்டு பிளாக் தலைமை செயற்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் நவமணி  தலைமை வகித்தார். மாநில செயலாளர் வக்கீல் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் சங்கரநாராயணன் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் மகேஸ்வரன் தீர்மானங்களை விளக்கி பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு, மார்க்சியகம்யூனிஸ்ட் மற்றும் பார்வர்டு பிளாக் ஆகிய இடது சாரி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ள 23  தொகுதிகளையும் சேர்த்து அதிமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபடுவது என இந்த கூட்டம் முடிவு செய்கிறது.

    நடிகர் கார்த்திக்கை அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தேர்தல் காலங்களில் மட்டும் சினிமா சூட்டிங்கில் நடிப்பது போல அரசியல் பேசிவிட்டு பிறகு தலைமறைவாகிவிடுவது நடிகர் கார்த்திக்கின் வழக்கமாக இருக்கிறது. கடந்த காலங்களில்  கார்த்திக்கின் செயல்பாடுகளால் நீண்ட நெடிய தியாக சரித்திரம் கொண்ட நேதாஜி, பசும்பொன்தேவர் ஆகியோர் உருவாக்கிய அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது. அதிமுகவை தோற்கடிக்க நடிகர் கார்த்திக் அரசியல் சூதாட்டம் நடத்துகிறார் என்பதை நிரூபிப்பது போல் தற்போதும் தனித்து நிற்கப்போவதாக நாடகம் நடத்தி அரசியல் லாபம் பெறுகிறார் என்பதே உண்மையாக தெரிகிறது. நேதாஜி, பசும்பொன் தேவர் திருத்தொண்டர்களின் அரசியல் வரலாறு தெரியாத சிறு பிள்ளையாக நடிகர் கார்த்திக்  தொடர்ந்து நடந்து கொள்வதால் தென் மாவட்டத்திற்குள் நடிகர் கார்த்திக் நுழைந்தால் முற்றுகை போராட்டம் நடத்துவதென தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

    ஓட்டுக்கு லஞ்சம் கொடுப்பதை தடுக்க அ.இ. பார்வர்டு பிளாக் மாவட்டம் தோறும் கண்காணிப்பு குழு அமைப்பது மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது என முடிவுசெய்யப்படுகிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில செயலாளர்கள் ராஜேஸ்வரன், நெல்லை ராமச்சந்திரன், வக்கீல் ஜெய்சங்கர், தஞ்சை தமிழ்பித்தன், மாவட்ட செயலாளர்கள் மஞ்சநாதன், தியாகராஜன், தேவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்