முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் பணி திருப்தி அளிக்கிறது -ரங்கசாமி

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

புதுச்சேரி, ஜன. - 14 - புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் ஸ்ரீசுமதி அறக்கட்டளை மற்றும் மனித நேய மக்கள் சேவை இயக்கம் இணைந்து ஸ்ரீசுமதி பாலவித்யாலையாவின் 5ம் ஆண்டு விழா மற்றும் உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட 10 மற்றும் பிளஸ்​2 மாணவ​மாணவியருக்கான பரிசளிப்பு விழா  கோவிந்த சாலை பள்ளிவாசல் அருகில் இன்று நடைபெற்றது.  நேரு எம்.எல்.ஏ, தலைமை தாங்கினார். முதல்வர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.அப்போது அவர் பேசியதாவது: தானே புயல் பாதிப்பை பார்த்தபோது மின்சாரம் 10 நாளிலாவது கிடைக்குமா? என்று தோன்றியது. ஆனால் மின்துறை ஊழியர்களுடன், அனைத்து மக்களும் ஒத்துழைப்பு கொடுத்ததன் காரணமாக ஒரே நாளில் நகரப் பகுதிக்கு மின்சாரம் கொடுக்கப்பட்டது. அந்த வேகத்தை பார்த்து தான் பொங்கலுக்குள் மின்சாரம் எல்லா பகுதிக்கும்  கொடுக்கப்படும் என்று அறிவித்தேன். அதன்படி மின் துறை ஊழியர்கள் இன்றும் பல்வேறு கிராமங்களுக்கு மின் இணைப்பு கொடுத்து வருகின்றனர். பொங்கலுக்குள் கொடுக்கும் வகையில் பணிகள் நடந்து கொண்டுள்ளது. நேரு எம்.எல்.ஏ. மனித நேய மக்கள் இயக்கம் தொடங்கி மக்கள் பாராட்டக்கூடிய நிலையில் செயல்பட்டு வருகின்றார். மக்களுக்கு சேவை செய்பவர்கள் அரசு அங்கீகாரம் கிடைத்தால் தான் சிறப்பாக இருக்கும் என்று நினைப்பார்கள். மக்களிடம் யார், யார் நெருக்கமாக உள்ளார்களோ அவர்களுக்கு மக்கள் அங்கீகாரம் அளிப்பார்கள்.  திடீரென கட்சி ஆரம்பித்து, எம்.எல்.ஏ.வாக தேர்வாகி விட முடியாது. நேரு சிறப்பாக பணியாற்றினார் என்பது தான் உண்மை. அவரின் பணியை பார்த்து நானே எம்.எல்.ஏ.வாக வர வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளேன். இருப்பினும் அதற்கெல்லாம் ஒரு நேரம் வர வேண்டும். தற்போது நேரம் வந்ததால் தான், மக்கள் அவருக்கு எம்.எல்.ஏ.வாக அங்கீகாரம் அளித்துள்ளனர்.  என்.ஆர்.காங்கிரஸ் தொடங்கி எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற்றவர்கள் யாரும் சோடை போகவில்லை. புயலின்போது அனைவரும் தங்கள் தொகுதிகளை விட்டு வெளியே வராமல் பணி செய்துள்ளனர். இதனால் எனக்கு திருப்தி ஏற்பட்டது.  சுகாதாரத்துறை சார்பில் அதிக ரத்ததான வழங்கியவர்களுக்கான விருதை மனித நேய மக்கள் சேவை இயக்கம் பெற்றது. அது போன்று தனது இயக்க நண்பர்களை நேரு தயார் செய்துள்ளார். எம்.எல்.ஏ.வாக வருவது சுலபம் கிடையாது. மக்கள் மனதில் நன்றாக சேவை செய்வார் என்ற எண்ணம் வர வேண்டும். மனிதனாக பிறந்த அனைவரும் பிறருக்கு உதவ வேண்டும். குறைந்தது தொந்தரவு அளிக்காமலாவது இருக்க வேண்டும். புதுச்சேரியில் நல்ல கல்வி கொடுக்கப்படுகின்றது என்பதில் ஐய்யம் இல்லை. நேரு பொது தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குவது போல், நானும் எம்.எல்.ஏ. ஆனது முதல் பள்ளிகளில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசு வழங்கி வருகின்றேன். அதனால் அப்பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. அனைவருக்கும் கல்வி கொடுப்பது மட்டுமின்றி, தரமான கல்வி கொடுக்க வேண்டும் என்பதும்தான் அரசின் எண்ணம்.  என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி மக்களுக்கு அனைத்து திட்டங்களையும் செய்யும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகின்றது. மக்கள் ஒரே ஒரு குறையாக உள்ள அரிசியை மட்டும் மாற்றி கொடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.  மத்திய அரசு கொடுக்கும் விலையிலேயே ஒற்றை அவியல் அரிசியை வழங்க வேண்டும் என்பது தான் எண்ணம். தற்போது அரிசி ஆலை அதிபர்கள் மத்திய அரசின் தரும் விலைக்கே ஒற்றை அவியல் அரிசியை தர ஒப்புக்கொண்டுள்ளனர். எனவே விரைவில் ஒற்றை அவியல் அரிசி மக்களுக்கு கிடைக்கும். தேவையானவர்களுக்கு, தேவையான உதவியை தேவைப்படும் காலத்தில் சரியாக இந்த அரசு செய்து கொடுக்கும். புதுச்சேரி மற்றும் கோவாவில் மட்டுமே கலப்படமின்றி பால் கொடுக்கப்படுவதாக ஒரு சர்வேயில் கூறினர். அதுபோல் அனைத்து துறையிலும் புதுச்சேரி உதாரணமாக திகழ அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்