முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5-வது போட்டியிலும் தோல்வி: வாஷ் அவுட் ஆனது இலங்கை

திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

ராஞ்சி, நவ.18 - இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி இலங்கையை ‘ஒயிட் வாஷ்’ ஆக்கியது.

ராஞ்சியில் நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணியில் டிக்வெல்லா 4 ரன்களிலும், பின்னர் வந்த சன்டிமல் 5 ரன்களிலும் ஆட்டமிழக்க, தில்ஷானுடன் இணைந்தார் ஜெயவர்த்தனா. இந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. தில்ஷான் 35 (24 பந்துகள்), ஜெயவர்த்தனா 32 ரன்களில் ஆட்டமிழக்க, 18.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்திருந்தது இலங்கை.

ஆனால் 5-வது விக்கெட்டுக்கு இணைந்த கேப்டன் மேத்யூஸும், திரிமானியும் இணைந்து இலங் கையை சரிவிலிருந்து மீட்டனர். இந்த ஜோடி 128 ரன்கள் சேர்த்தது. திரிமானி 52 ரன்களில் வெளியேறினாலும் மறுமுனையில் அதிரடியாக ஆடிய மேத்யூஸ் 102 பந்துகளில் சதமடித்தார். தொடர்ந்து சதத்தை நழுவவிட்டு வந்த மேத்யூஸ், தனது 116-வது போட்டியில் முதல் சதத்தை எடுத்துள்ளார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய அவர் 116 பந்துகளில் 10 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 139 ரன்கள் குவிக்க, இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் குவித்தது. இந்தியத் தரப்பில் குல்கர்னி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் பேட் செய்த இந்திய அணியில் ரஹானே 2, ரோஹித் சர்மா 9 ரன்களில் ஆட்டமிழக்க, ராயுடும், கோலியும் இணைந்தனர். நிதானமாக ஆடி இந்தியாவை சரிவிலிருந்து மீட்ட இந்த ஜோடி, இந்தியா 150 ரன்களை எட்டியபோது பிரிந்தது. 69 பந்துகளில் 59 ரன்கள் எடுத்த ராயுடு ரன் அவுட்டானார். ராயுடு-கோலி ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 136 ரன்கள் சேர்த்தது.

பின்னர் வந்த உத்தப்பா 19 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழக்க, கேதார் ஜாதவ் களம்புகுந்தார். 24 பந்துகளில் 20 ரன்கள் எடுத்த ஜாதவ், மென்டிஸ் பந்துவீச்சில் போல்டு ஆனார். இதையடுத்து ஸ்டூவர்ட் பின்னி களம்புகுந்தார். இதனிடையே கேப்டன் கோலி 107 பந்துகளில் சதம் கண்டார். இது அவருடைய 21-வது சதமாகும்.

இதன்பிறகு மென்டிஸ் பந்து வீச்சில் ஸ்டூவர்ட் பின்னி (12), அஸ்வின் (0) ஆகியோர் அடுத் தடுத்து ஆட்டமிழக்க, கோலியுடன் இணைந்தார் அக்ஷர் படேல். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 48.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. கோலி 126 பந்துகளில் 3 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 139 ரன்களும், அக்ஷர் படேல் 17 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த போட்டியில் ஆல் ரவுண்டராக சதம் அடித்தது மட்டுமள்ளாமல் பவுலிங், பீல்டிங்கிலும் கலக்கிய இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக இந்திய தற்காலிக கேப்டன் வீராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.

வெற்றிக்கு பிறகு கேப்டன் கோலி கூறியதாவது:

எதிர்முனையில் விக்கெட்டுகள் சரிவடைந்த போது கோபமும் கவலையும் ஏற்பட்டது. ஆட்டத்தின் சூழ்நிலைமைகளை புரிந்து செயல்பட வேண்டியது அவசியம். சூழ்நிலைக்குத் தக்கவாறு ஆட வேண்டும். அக்‌ஷர் படேல் நிதானமாக ஆடினார். அவர் நான் சொன்னவற்றுக்கு செவிமடுத்தார். பந்து மட்டைக்கு எளிதில் வரவில்லை. பந்து பழசாகி விட்டால் பெரிய ஷாட்களை ஆடுவது கடினம். எதிர்முனையில் பேட்ஸ்மென்கள் இல்லாமல் தனித்து விடப்பட்டேன். அக்‌ஷர் படேல் காட்டிய அதே கவனத்தை மற்ற வீரர்களும் காட்ட வேண்டும்.
பிறரிடமிருந்து ஒன்றை நாம் எதிர்பார்க்கும் போது, நாம்தான் அவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்பது எனது கொள்கை. ஆகவே, நானே நின்று முடித்தேன். எம்.எஸ்.தோனியின் சொந்த மண்ணில் அவரது ஹெலிகாப்டர் ஷாட்டை ஆடியதில் எனக்கு மகிழ்ச்சி. இந்தத் தொடரில் இளம் வீரர்கள் சிலரின் நிதானப் போக்கை கவனித்திருக்கலாம், அந்த அணுகுமுறை முக்கியமானது. ரோஹித் சர்மாவின் சாதனையை இப்போதைக்கு உடைக்க முடியாது." இவ்வாறு கோலி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்