முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தி மற்றும் சமஸ்கிருதத்தாலோ சிறப்புமிகக் தமிழ்மொழியை ஒருபோதும் அழிக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

வியாழக்கிழமை, 27 பெப்ரவரி 2025      தமிழகம்
Stelin 2022 02 23

சென்னை, சிறப்புமிக்க தமிழ்மொழியை இந்தி மொழியாலோ, இந்தியை முன்னிறுத்தி மறைமுகமாகத் திணிக்க நினைக்கும் சமஸ்கிருதத்தாலோ ஒருபோதும் அழிக்க முடியாது. ஆனால், சில மொழிகள் இந்திக்கு இடம் கொடுத்தன. இருந்த இடம் தெரியாமல் தொலைந்தன. அதனாலேயே நாம் இந்தித் திணிப்பை எதிர்கிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இந்தி என்ற முகமூடிக்கு பின்னால் சமஸ்கிருதத்தின் முகம் இருப்பதாக விமர்சித்து மொழிப் போராட்ட வரலாற்றுப் பின்னணியில் உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் 3-வது மடல் என்று குறிப்பிட்டு தி.மு.க.வின் அதிகாரபூர்வ இதழில் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தின் விவரம் வருமாறு:

இந்தியால் தமிழ் அழியாது. ஆனால், தமிழ்ப் பண்பாடு அழிந்து போகும். இன்று வேலைக்காரியாக வரும் இந்தி, நாளை தமிழ் நாட்டரசி ஆவது நிச்சயம் என்று எச்சரித்தார். ஓர் இனத்தை அழிக்க வேண்டுமென்றால் அதன் மொழி மீது தாக்குதல் நடத்தி, பண்பாட்டை சிதைக்க வேண்டும் என்பதை பாசிச எண்ணம் கொண்டோர் கடைப்பிடித்தார்கள். அண்மையில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் இந்தியா மீதான முந்தைய படையெடுப்புகள் குறித்துப் பேசியபோது, “ஒரு மாநிலத்தைக் கைப்பற்ற வேண்டுமென்றால், அதன் கலாச்சாரத்தை கையிலெடுப்பதும், மொழியை அழிப்பதுமே சிறந்த வழி என்று குறிப்பிட்டதை மறக்க முடியாது. மத்திய பா.ஜ.க. அரசின் கொள்கையே அதுவாகத்தான் இருக்கிறது.

இந்தி மொழியை ஏற்றுக்கொண்ட பீகார் மாநில மக்களின் சொந்த மொழியான மைத்திலி, அந்த மாநிலத்தின் அடுத்தடுத்த தலைமுறையினர் அறிய முடியாதபடி வழக்கொழிந்தது. இவை மட்டுமா? ஹரியாண்வி, ராஜஸ்தானி, மார்வாரி, மேவாரி, மால்வி, நிமதி, பகேலி, ஜார்கன்ஷி, சந்த்தலி, சட்டீஸ்கரி, கோர்பா உள்ளிட்ட மொழிகள் பேசுவோரைத் தேட வேண்டியுள்ளது. உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், ஜார்கண்ட், சட்டீஸ்கர், ஹரியானா, ராஜஸ்தான் என இந்தியை ஆட்சிமொழியாகக் கொண்ட மாநிலங்களின் பூர்வீக மொழிகள் சிதைக்கப்பட்டு, அழிக்கப்பட்ட நிலையில், அந்த மொழி பேசும் மக்களின் பண்பாட்டு விழுமியங்களும், இலக்கியச் செழுமைகளும், மரபார்ந்த அறிவுத்திறனும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிருக்கின்றன.

வடஇந்திய மாநிலங்களில் 25க்கும் மேற்பட்ட அந்தந்த மண்ணின் தாய்மொழிகளை கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் இந்தி-சமஸ்கிருதம் எனும் ஆதிக்க மொழிகளின் படையெடுப்பு சிதைத்திருக்கிறது. நூற்றாண்டைக் கடந்த திராவிட இயக்கம் ஏற்படுத்திய விழிப்புணர்வினாலும், அதன் தொடர்ச்சியானப் போராட்டத்தினாலும் நம் தாய்த் தமிழ் மொழி காப்பாற்றப்பட்டு, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகள் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றன. இதனை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் மத்திய பா.ஜ.க. அரசின் தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி-சமஸ்கிருத மொழிகளைத் திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதனை உணர்ந்திருப்பதால்தான் தமிழ்நாடு எதிர்க்கிறது.

தமிழர்களின் பண்பாட்டிற்கு நேரெதிரான கொள்கைகளைக் கொண்ட பா.ஜ.க. மட்டும், தேசிய கல்விக் கொள்கையின் மும்மொழித் திட்டத்தை ஆதரித்தபடியே, இந்தி-சமஸ்கிருதம் என்று எங்கே இருக்கிறது? மூன்றாவது மொழியாக, இந்தியாவில் உள்ள எந்த மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம். அயல்நாட்டு மொழிகளைக் கூடக் கற்கலாம் என்று ஒரு ‘தினுசாக’ப் பேசுகிறார்கள். அடடா..! இவர்களுக்குத்தான் இந்திய மொழிகள் மீது எவ்வளவு அக்கறை?

மும்மொழித் திட்டம் என்ற பெயரில் என்னென்ன மொழிகள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன என அட்டவணையைப் பார்த்தால் பெரும்பாலான மாநிலங்களில் இந்தி அல்லது சமஸ்கிருதமே முன்னிலைப்படுத்தப்படுகிறது. தேசிய கல்விக் கொள்கை 2020ன் 4.17வது பிரிவு, “இந்தியஅரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள செம்மொழியான சமஸ்கிருதம் இலக்கியம், கணிதம், அறிவியல், மருத்துவம், தத்துவம், இசை, அரசியல் இன்ன பிற உள்ளிட்ட பல்வேறு கலைச்செல்வங்களைக் கொண்டுள்ளது, இதனால் சமஸ்கிருத மொழி பள்ளிகளிலும், உயர்கல்வியிலும் அனைத்து நிலைகளிலும் மும்மொழித் திட்டத்தில் ஒன்றாக மாணவர்களுக்கு கற்றுத் தரப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிறகே, மூத்த மொழியான தமிழ் மற்றும் இந்தியாவின் பிற மொழிகள் பற்றி 4.18வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், சமஸ்கிருதத்தைத் திணிக்கவும், தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளைப் புறங்கையால் ஓரங்கட்டவும் திட்டமிட்டே மத்திய பா.ஜ.க. அரசு தேசியக் கல்விக் கொள்கையையும் அதன் வழியாக மும்மொழித் திட்டத்தையும் நம் மீது திணிக்கிறது என்பது தெளிவாகிறது.

தமிழ்ப் பண்பாட்டை அழிக்க நினைத்து, சமஸ்கிருத-இந்தி மொழிகள் மூலம் ஆரியப் பண்பாட்டைத் திணிக்க எவர் முயற்சித்தாலும் அதற்கு இந்த மண்ணில் இடம் கிடையாது என்கிற வகையில் அரை நூற்றாண்டுக்கு முன்பே தமிழ்நாட்டில் இருமொழி கொள்கையை சட்டமாக்கினார் அண்ணா. அந்த வரலாற்றுப் பக்கத்தைப் புரட்டினால்தான் இன்றைய மத்திய ஆட்சியாளர்களின் வஞ்சகத்தை இளையதலைமுறை புரிந்துகொள்ள முடியும். இவ்வாறு முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து