முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்வமுடன் மாணவ-மாணவிகள் பங்கேற்பு: தமிழ்நாட்டில் நீட் தேர்வை 1.50 லட்சம் பேர் எழுதினர்

ஞாயிற்றுக்கிழமை, 5 மே 2024      தமிழகம்
NEET 2024-05-04

Source: provided

சென்னை : இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான 'நீட்' நுழைவு தேர்வை தமிழகத்தில் நேற்று 1.50 லட்சம் பேர் பங்கேற்று ஆர்வமுடன் எழுதினர்.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு, தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு என்ற நீட் தேர்வு வாயிலாக மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. நீட் தேர்வை, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வுகள் முகமை நடத்தி வருகிறது. அதன்படி, 2024 - 25ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட 13 மொழிகளில் நாடு முழுவதும், 557 நகரங்களில் நேற்று ( மே 05) நடந்தது.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் 'நீட்' நுழைவு தேர்வு நேற்று மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிக்கு நிறைவு பெற்றது. தமிழகத்தில் 1.50 லட்சம் பேர் உட்பட நாடு முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். சென்னையில் 36 மையங்களில் மொத்தம் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வை ஆர்வமுடன் எழுதினர்.

நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் (தாவரவியல், விலங்கியல்) பாடங்களில் தலா 50 கேள்விகள் என, 200 கேள்விகள் கேட்கப்படும். அவற்றில், 180 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என, மொத்தம் 720 மதிப்பெண் வழங்கப்படுகிறது. தவறான பதிலுக்கு 1 மதிப்பெண், 'நெகட்டிவ்' என்ற அடிப்படையில் குறைக்கப்படும்.

முன்னதாக ஹால்டிக்கெட் மற்றும் அடையாள சான்று இல்லாத மாணவர்களுக்கு தேர்வு மையங்களுக்குள் அனுமதி மறுக்கப்பட்டது. தேர்வர்கள், மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனைக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டனர். தேர்வு அறையில் முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்களை கண்காணிக்க தேசிய தேர்வுகள் முகமை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது. முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்கள் அடுத்த 3 ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும். மேலும், அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து