சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி: கலெக்டர் ஆய்வு

சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      மதுரை
Mdu-Cor

மதுரை - மதுரை மாநகராட்சி மாவட்ட நீதிமன்றம் முதல் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை வரையுள்ள மாட்டுத்தாவணி பேருந்து நிலைய பகுதிகள், நீதிபதிகள் குடியிருப்பு பகுதிகள், உலகனேரி பகுதிகள், வண்டியூர் கண்மாய் பகுதிகள், மாவட்ட நீதிமன்ற வளாக பகுதிகள் ஆகிய பகுதிகளில் உள்ள சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணியினையும் அகற்றப்பட்டுள்ள பகுதிகளையும் ஆணையாளர் சந்தீப் நந்தூரி முன்னிலையில் மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவராவ் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.


சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை மதுரை மாநகரில் உள்ள அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்களில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் ஆணையாளர் சந்தீப்நந்தூரி உத்தரவின்படி மதுரை மாநகராட்சிக்குட்பட்ட வார்டுப் பகுதிகளில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்காக அந்தந்த மண்டல உதவி ஆணையாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு மாநகராட்சி மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது.
மேலும் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட வார்டுப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு சொந்தமான குடியிருப்புகள் ஃ வணிக வளாகம் ஃ தொழிற்சாலை மற்றும் காலிஇடங்களில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை உடனடியாக அகற்றுமாறும் தவறும் பட்சத்தில் மதுரை மாநகராட்சி சட்டம் 1971 பிரிவு 329 மற்றும் 479 பிரிவின் கீழ் தங்களுக்கு சொந்தமான இடங்களில் உள்ள கருவேல மரங்கள் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் இயந்திரங்கள் மூலம் அகற்றப்படுவதுடன் அதற்குண்டான செலவினத் தொகை தங்களிடமிருந்து வசூலிக்கப் படுவதோடு அபராதத் தொகையும் சேர்த்து வசூலிக்கப்படும் என ஏற்கனவே மாநகராட்சி மூலம் அறிவிக்கபட்டிருந்தது. அதன் அடிப்படையில் மதுரை மாநகராட்சி பகுதிகளில் சீமைக் கருவேல மரங்களை அகற்றாத183 தனியார் இடத்தின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டது.  மேலும் இதுவரை அகற்றாத தனியார் இடங்களில் மாநகராட்சியின் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணியினை விரைவில் முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.


பொதுமக்களும் தனியார் இடங்களுக்கு சொந்தமான நில உரிமையாளர்களும் தங்கள் இடத்தில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என ஆணையாளர் சந்தீப் நந்தூரி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இந்த ஆய்வின் போது நகரப்பொறியாளர் மதுரம், செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவிப் பொறியாளர் பொன்மணி, மக்கள் தொடர்பு அலுவலர்கள் செந்தில் அண்ணா, சித்திரவேல், சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன், பொதுப்பணிதுறையினர், வருவாய்த் துறையினர் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: