2 மாதங்களாகியும் வங்கி _ ஏ.டி.எம்.களில்

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2017      திண்டுக்கல்
di

திண்டுக்கல், 

மத்திய அரசு பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியிட்டு 2 மாதங்களாகியும் வங்கி மற்றும் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க முடியாமல் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மத்திய அரசு கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக உயர் மதிப்பு நோட்டுக்கள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி அறிவித்தது. அதன்பின் வங்கி மற்றும் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. பணப்பிரச்சனை ஓரிரு நாட்களில் தீர்ந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2 மாதங்களாகியும் இன்னும் முடிவுக்கு வராமல் உள்ளது. வங்கி மற்றும் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க மக்கள் தவம் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான ஏ.டி.எம்.கள் ஞீட்டியே கிடக்கின்றன. திறந்திருக்கும் ஒரு சில ஏ.டி.எம்.களிலும் சில மணி நேரங்களில் பணம் தீர்ந்து விடுகிறது. ஏ.டி.எம். மையங்கள் முன்பு பணம் இல்லை என்பதை குறிக்கும்வகையில் பல்வேறு அறிவிப்பு பலகைகள் தொங்க விடப்பட்டு தேவையில்லாமல் வாட்ச்மேன் நிறுத்தப்பட்டுள்ளனர்.

வங்களில் பணம் எடுக்க முடியாத நிலையால் அரசு ஊழியர்கள் மாத சம்பளத்தை எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். ஆரம்பத்தில் வாரம் ரூ.24 ஆயிரம் மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. படிப்படியாக இந்த நிபந்தனைகள் தளர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டாலும் அந்த பணத்தையே எடுக்க முடியாத நிலையே இன்னும் நிலவி வருகிறது. இது மட்டுமின்றி 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களும் வங்கியில் பணம் எடுக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். 

திண்டுக்கல்  மற்றும் புறநகர் பகுதிகளில் ஏராளமான மில்கள் உள்ளன. இந்த மில்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் வங்கியிலேயே சம்பளம் வழங்கப்படுகிறது. திண்டுக்கல் நேருஜி நகர் ஸ்டேட் பேங்கில் நேற்று ஒரே நாளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வங்கியில் சம்பளம் எடுக்க குவிந்ததால் கூட்டம் அலைமோதியது. அதிகாலையிலேயே சம்பளம் எடுக்க வந்தவர்கள் இடம் இல்லாததால் மாடியிலும் நிறுத்தி வைக்கப்பட்டனர். தாங்கள் வேலை செய்த சம்பளத்தை எடுக்கவே நாள் முழுவதும் கால் கடுக்க நிற்க வேண்டிய நிலையில் மக்கள் சொல்லொண்ணா துயரத்தில் உள்ளனர். ஏ.டி.எம்.களிலும், வங்கிகளிலும் தடையற்ற பணப்பரிவர்த்தனை எப்போது நடைபெறும் என்ற ஏக்கத்தில் மக்கள் பெரிதும் தவித்தவண்ணம் உள்ளனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: