மே.இ.தீவுகளுக்கு எதிரான போட்டி மழையால் ரத்து - தென்ஆப்பிரிக்க கேப்டன் வருத்தம்

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2019      விளையாட்டு
SA Captain Sad 2019 06 11

லண்டன் : வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான உலகக் கோப்பை போட்டி மழையால் தடை பட்டதற்கு டு பிளசிஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தலா ஒரு புள்ளி...

உலகக் கோப்பை தொடரின் 15வது லீக் போட்டி தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே நடைபெற்றது. முதல் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 7.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 29 ரன்கள் எடுத்திருந்தபோது, போட்டி மழையால் நிறுத்தப்பட்டது. பின்னர் ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. ஏற்கெனவே 3 போட்டிகளில் தொடர் தோல்வி அடைந்துள்ள தென்னாப்பிரிக்கா அணிக்கு இது பின்னடைவாக அமைந்தது.

மோசமானது...

போட்டி மழையால் ரத்தானது தொடர்பாக பேசிய தென்னாப்பிரிக்க கேப்டன் டு பிளசிஸ், “மழை போட்டியை பாதித்தது மோசமானது. இரண்டு அணிகளும் ஒரு முடிவை எதிர்பார்த்தோம். ஆனால் எங்களால் வானிலையை கட்டுப்படுத்த முடியவில்லை. தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இன்று (நேற்று) இழந்ததுபோல இல்லாமல், ஒரு நாள் விளையாட்டை தொடங்க வேண்டும். வெஸ்ட் இண்டீஸில் நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் இந்த இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டனர்.

களமிறங்குவோம்...

அதிக போட்டிகளில் இரண்டாவது பேட்டிங்கின் போது மழை வரும். அதனால் போட்டி 30 அல்லது 35 ஓவர்களாக குறைக்கப்பட்டு முடிவு பெறும். ஆனால் இன்று அப்படிக்கூட எதுவும் நடக்கவில்லை. லுங்கி நிகிடி அடுத்த போட்டியில் தயார் ஆகிவிடுவார். அடுத்த போட்டி எங்களுக்கு மிக முக்கியம் வாய்ந்த போட்டி என்பதால் வலிமையான பவுலிங்குடன் களமிறங்குவோம்” என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து